மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

4 நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர்: சிஏஏ தீர்மானம் வருமா?

4 நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர்: சிஏஏ தீர்மானம் வருமா?

பட்ஜெட் கூட்டத் தொடர் 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்ரவரி 14) காலை 10 மணிக்குத் துவங்கியது. 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பன்னீர்செல்வம் உரையை வாசித்து முடித்ததும் இன்றைய அவை நடவடிக்கைகள் முடிவடைந்தன.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் 4 நாட்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், “பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறும். சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் வரும் 17ஆம் தேதி சட்டமன்றக் கூட்டம் மீண்டும் கூடுகிறது. 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறுகிறது. அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் உண்டு” என்று தெரிவித்தார்.

சிஏஏவுக்கு எதிராக திமுக கொண்டுவந்த தீர்மானம் குறித்த கேள்விக்கு, “ஏற்கனவே இதுதொடர்பாக கடிதம் அளித்துள்ளனர். இதுபற்றிய பதிலை நான் அவையில் சொல்வேன். இங்கு என்னால் சொல்ல முடியாது” என்று தெரிவித்தவர், தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

த.எழிலரசன்

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon