மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

எதற்கும் பத்தாத பட்ஜெட்: ஸ்டாலின்

எதற்கும் பத்தாத பட்ஜெட்: ஸ்டாலின்

துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர் செல்வத்தின் 10ஆவது பட்ஜெட், யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் பன்னீர் செல்வம் 2020-21க்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது மின்சாரத் துறைக்கு ரூ. 20,115 கோடி ஒதுக்கீடு, கல்வித் துறைக்கு ரூ. 34,841 கோடி ஒதுக்கீடு, சுகாதாரத் துறைக்கு ரூ. 15,863 கோடி ஒதுக்கீடு எனப் பலதுறைகளுக்குமான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டார். இன்று காலை 10மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரை மதியம் 1.15 வரை நடந்தது. இதன் பின் சட்டப்பேரவையைப் பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “நிதியமைச்சர் இன்று 10ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. இது இந்த ஆட்சியின் கடைசி நிதி நிலை அறிக்கை என்பது தெளிவாக தெரிகிறது.

பட்ஜெட்டை பொறுத்தவரையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், வருவாய் பற்றாக்குறை, கடன் சுமை தான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. கடன் சுமையைப் பொருத்தவரை 4,56,660 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.57,000 கடன் சுமத்தப்படுகிறது.

2011 வரை திமுக ஆட்சியிலிருந்த போது கடன் சுமை என்பது ஒரு லட்சம் கோடி ரூபாய்தான். 60 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நிலை அதிமுக ஆட்சியில் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை இந்த பட்ஜெட் எடுத்துக் காட்டுகிறது. அதன்படி பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்களும், தொலைநோக்கு பார்வையும் இல்லை.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், முதல்வர், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இலாகாக்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் மர்மம் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறினார்.

-கவிபிரியா

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon