மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

இளைஞர்களின் வேலைவாய்ப்பு: காங்கிரஸ் கேள்வி!

இளைஞர்களின் வேலைவாய்ப்பு: காங்கிரஸ் கேள்வி!

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 14) தாக்கல் செய்தார். அதில், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்களையும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் தெரிவித்திருந்தார். எனினும், நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பட்ஜெட் மீதான உரை முடிந்த பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளியே வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, “நிதிநிலை அறிக்கையில் கடைசிவரை துறை சம்பந்தமான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற மோசமான நிதிநிலை அறிக்கையை யாரும் பார்த்ததேயில்லை. இதனை நம்பி தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து ஒருவார்த்தை கூட பேசப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

“ஆண்டுக்கு ஆண்டு கடன் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரின் மீதும் கடன்சுமையை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வருவாய் பற்றாக்குறை இருக்கும் நிலையில், வருவாயை அதிகரிக்க பட்ஜெட்டில் எதுவுமே சொல்லப்படவில்லை” என்று விமர்சித்த ராமசாமி, காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற்றுவிட்டதா என முதல்வர் விளக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

த.எழிலரசன்

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon