மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

தேர்தல் பீதியில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்: தினகரன்

தேர்தல் பீதியில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்: தினகரன்

நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 14) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம், தமிழக அரசின் வருவாய் விவரங்களை அறிவித்தார். தமிழக அரசின் வருவாய் ரூ.2,19,375 கோடியாகவும், செலவு 2,41,601 கோடியாக இருக்கிறது என்று தெரிவித்த பன்னீர்செல்வம், “22,226 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை உள்ளது. 2021-2022 ஆம் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்” என்றும் நம்பிக்கையாகக் கூறினார். மேலும், 2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன், “தமிழகத்தின் நிதி நிலைமை சிக்கலாக இருப்பதாக நிதியமைச்சரே தனது அறிக்கையில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனை முழுதாகப் படித்தால், தேர்தல் வருகிறதே என்ற பீதியில் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக உள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகன் மீதும் சுமார் 57,000 ரூபாய் கடன் தொகையை சுமத்தியுள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

“புதிதாக ரூ. 59,000 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தின் திட்டங்களுக்காக மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோம் எனக் கூறிவிட்டு, தற்போது மத்திய அரசு தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை தரவில்லை என்று சொல்கிறார்கள். மத்திய அரசின் மீது பழிபோடுகிறார்கள். பின்னர் எதற்காக அமைச்சர்கள் டெல்லி சென்று வருகிறார்கள் என்றுதான் தெரியவில்லை” என்று சாடிய தினகரன், தமிழக அரசின் திறமையற்ற நிர்வாகத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் விமர்சித்தார்.

மேலும், “இந்த நிதிநிலை அறிக்கை என்பது காற்றில் வரைந்த ஓவியமாகத்தான் உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

த.எழிலரசன்

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon