மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்!

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்!

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து துணை முதல்வரும், நிதித் துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றிவருகிறார்.

“2019-20 ம் ஆண்டில் 7.27% என மதிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சி விகிதமானது இந்திய அளவில் கணிக்கப்பட்ட 5% -ஐ காட்டிலும் அதிகமாகும்.மத்திய வரிகளில் மாநில அரசிற்கான நிதிப் பகிர்வை 42% -லிருந்து 41% ஆக குறைக்க வேண்டுமென நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. 2019-20ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் ரூ. 33,978.47 கோடியாக இருந்த மத்திய வரியின் மாநில அரசிற்கான பங்கு, 2019-20ம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் ரூ. 26,392.40 கோடி ரூபாயாக முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைக்கப்பட்டிருப்பதால் தமிழகம் மாபெரும் பின்னடைவை சந்தித்துள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.23,161 கோடி நிதியும், குடிமராமத்து பணிகளுக்கு 300 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும். முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர் மாநிலத்தின் எந்தவொரு நியாய விலை கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதியும், பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும். தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும். பேரிடர் மேலாண்மை துறைக்கு 1360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், சென்னை வெள்ள பாதிப்பை குறைக்க 100 கோடி ரூபாயும், தீயணைப்பு துறைக்கு 405 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும். அம்மா உணவகத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாயும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு 959.21 கோடி ரூபாயும், திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும்.

கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். 7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2011 ஏப்ரல் முதல் 2019 அக்டோபர் வரை 24,10,107 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உழவர் பாதுகாப்பு திட்டம் ரூ.200.82 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

த.எழிலரசன்

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon