மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

புல்வாமா தாக்குதலில் பயனடைந்தது யார்?: ராகுல்

புல்வாமா தாக்குதலில் பயனடைந்தது யார்?: ராகுல்

புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற விவரம் இன்னும் தெரியவராத நிலையில், இந்த தாக்குதலால் யார் யார் பலனடைந்தனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், இந்த தாக்குதலில் சந்தேகிக்கப்படும் நபர்கள் யாரும் உயிருடன் இல்லாததால் இன்னும் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யாமல் இருக்கிறது என்.ஐ.ஏ. அதுபோன்று தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்விக்கும் விடையில்லை.

இந்நிலையில் தாக்குதலில் உயிர் நீத்த 40 வீரர்களுக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, 4 கேள்விகளை முன்வைத்துள்ள அவர், “இந்த தாக்குதலில் அதிகம் பயனடைந்தது யார்?, தாக்குதல் தொடர்பான விசாரணையில் கிடைத்தது என்ன? தாக்குதலுக்கு அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் இதுவரை யார் பொறுப்பேற்றது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேசமயத்தில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஆண்டு நடந்த கொடூரமான புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாக பதிவிட்டுள்ளார். மேலும், தேசத்தைக் காக்கவும், சேவை செய்யவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை இந்த நாடு ஒரு போதும் மறக்காது என்று கூறியுள்ளார்.

-கவிபிரியா

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon