மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

தமிழக அரசின் கடன் சுமை: ஓபிஎஸ்

தமிழக அரசின் கடன் சுமை: ஓபிஎஸ்

தமிழக அரசின் கடன் சுமை குறித்த தகவலை நிதி நிலை அறிக்கையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தியுள்ளார்.

2020-21ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்ரவரி 14) துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்ய வரும் வழியில் சேப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பட்ஜெட் உரையுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பட்ஜெட் உரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இது பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 9ஆவது பட்ஜெட் ஆகும்.

சட்டமன்ற கூட்டம் துவங்கியதும் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய பன்னீர்செல்வம், “தமிழக அரசின் வருவாய் ரூ.2,19,375 கோடியாக உள்ளது. அரசின் செலவு 2,41,601 கோடியாக இருக்கிறது. 22,226 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை உள்ளது. 2021-2022 ஆம் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும். 2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு 74 கோடி ரூபாயும், காவல் துறைக்கு 8876 கோடி ரூபாயும், சிறைச் சாலை துறைக்கு 392 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும். நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடியும், கால்நடைத் துறைக்கு 199 கோடியும், மீன்வளத் துறைக்கு 1,229 கோடியும், நீர் பாசனத் துறைக்கு 6,991 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடியும், பள்ளிக் கல்வி துறைக்கு 34,181 கோடி ரூபாயும், உயர்கல்வித் துறைக்கு 5,052 கோடியும், சுகாதாரத் துறைக்கு 15,863 கோடி நிதியும், தொழிலாளர் நலத் துறைக்கு 200 கோடியும், தொழில் துறைக்கு 2, 500 கோடியும், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 153 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெடுஞ்சாலை துறையில் புதிதாக சாலை பாதுகாப்பு பிரிவு அமைக்க ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். 960 கோடி நிதி ஒதுக்கீட்டில் 524 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த 75 கோடி ரூபாயில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

பட்ஜெட் உரையை வாசிக்கும்போது, இது அம்மாவின் அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி கூறினார்.

த.எழிலரசன்

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon