மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

டெல்லி தோல்விக்கு வெறுப்புப் பேச்சே காரணம்: அமித் ஷா

டெல்லி தோல்விக்கு வெறுப்புப் பேச்சே காரணம்: அமித் ஷா

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்குக் காரணம் பாஜகவினரின் வெறுப்புப் பேச்சுதான் என்று பாஜக முன்னாள் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியிருக்கிறார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்விக்குப் பிறகு நேற்று (பிப்ரவரி 13) டெல்லியில் ‘டைம்ஸ் நவ் சம்மிட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அமித் ஷா,

அப்போது அவரிடம் டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றி கேட்கப்பட, “கோலி மாரோ, இந்தத் தேர்தலில் இந்திய பாகிஸ்தான் போட்டி போன்ற பேச்சுகள் பேசப்பட்டிருக்கக் கூடாது. இதன் காரணமாக எங்கள் செயல்திறன் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று அவர் கூறினார்.

மேலும் அவர், “பாஜக தேர்தல்களைச் சந்திப்பது வெற்றி தோல்விக்காக அல்ல. தேர்தல்கள் மூலம் எங்கள் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார் அமித் ஷா.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​பிஜேபி தலைவரும், மத்திய நிதித் துறை இணையமைச்சருமான அனுராக் தாக்கூர், “தேச துரோகிகளை என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்க, பாஜகவினர், ‘சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்று கோஷமிட்டனர். இதை பல இடங்களில் கூறினார்கள். பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா சட்டமன்றத் தேர்தலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு இணையாக ஒப்பிட்டுப் பேசினார். அதாவது பாஜக என்பது இந்திய டீம் என்றும், காங்கிரஸ், ஆம் ஆத்மியெல்லாம் பாகிஸ்தான் டீம் என்றும் அவர் பேசினார். இன்னுமொருபடி மேலே போய் ​​ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் ஷாஹீன் பாக் போன்ற மினி பாகிஸ்தான்களை உருவாக்கியதாக குற்றம்சாட்டினர். இரு தலைவர்களும் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையமே தடை விதித்தது.

டெல்லி பிரச்சாரத்தில் அமித் ஷா பேசும்போதுகூட ‘பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஷாஹீன் பாக் துடைத்து எறியப்படும்’ என்றெல்லாம் பேசினார். பாஜகவினரின் வெறுப்புப் பிரச்சாரமே பாஜகவின் தோல்விக்குக் காரணம் என்பதை இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறார் அமித் ஷா.

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon