மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

அதிகரிக்கும் மதுக்கடைகள்: மதுவிலக்கு வாக்குறுதி எங்கே போனது?

அதிகரிக்கும் மதுக்கடைகள்: மதுவிலக்கு வாக்குறுதி எங்கே போனது?

தமிழக அரசின் மதுவிலக்கு வாக்குறுதி என்னவானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றவுடன் சுமார் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன்மூலம் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 5,667 ஆகக் குறைந்தது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் திறக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக 1,500 கடைகள் வரை மூடப்பட்டன. அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக பிரச்சினை இல்லாத இடங்களில் புதிய மதுக்கடைகளை திறப்பதில் டாஸ்மாக் தீவிரம் காட்டியது.

இதுதொடர்பாக டிடி நெக்ஸ்ட் ஊடகத்திற்கு டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், “2017-18ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தமிருந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 2,830. 2018-19 ஆண்டுகளில் அது 3,866 கடைகளாக அதிகரித்தது. 2019-20ஆம் ஆண்டில் அதுவே 5,152 டாஸ்மாக் கடைகளாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 2,295 கடைகள் திறக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 8 மாதங்களில் மட்டும் 45 புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி மாத நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமுள்ள மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 5197 என்றும், புதிய மதுக்கடைகளை திறந்ததன் மூலமாகவும், மதுபானங்களின் விலையை அதிகரித்ததன் மூலமாக தற்போது தமிழக அரசுக்கு கூடுதலாக 2,500 கோடி ரூபாய் வரை வருமானம் வரும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும், “மது விற்பனை மூலம் தமிழகத்திற்கு வரும் வருமானம் தற்போது 31,157 கோடியாக உள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் அது 34,000 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கிறோம். வழக்கமாக நாள் ஒன்றுக்கு மது விற்பனை 80 கோடி ரூபாயாக இருந்தது. விலை உயர்வின் மூலம் அது 100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று சொல்லிவிட்டு, அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுதொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “கடந்த 3ஆண்டில் 2000-க்கும் மேலான டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது?சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது” என்று சாடியுள்ளார்.

த.எழிலரசன்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon