மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

100 முறை சிறையில் அடைத்தாலும்: கே.சி.பழனிசாமி சவால்!

100 முறை சிறையில் அடைத்தாலும்: கே.சி.பழனிசாமி சவால்!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக தனக்கு கடிதம் வரவில்லை என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று ஊடக விவாதம் ஒன்றில் பேசியதற்காக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், அதன் பின்னரும் கட்சியின் சின்னமான இரட்டை இலையை பயன்படுத்துவதாகவும், லெட்டர் பேடு, இணையதளம் நடத்திவருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 17 பிரிவுகளின் கீழ் பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஜனவரி 25ஆம் தேதி அதிகாலை அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது எழுப்பி கைதுசெய்து அழைத்துச் சென்றனர். நேற்று முன் தினம் பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, இன்று (பிப்ரவரி 13) காலை கோவை சிறையிலிருந்து விடுதலையானார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.பழனிசாமி, “நான் அதிமுகவின் உறுப்பினர் என்று சொல்லிக்கொண்டு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துகிறேன் என்பதுதான் வழக்கு. ஆனால், அதிமுகவிலிருந்து நான் நீக்கப்பட்டது தொடர்பான கடிதம் எனக்கு வரவில்லை. ஊடகங்களில் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பின்படி நான் நீக்கப்பட்டது சரியென்றால், என்னுடைய ஜாமீன் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் என்னை சிறையிலிருந்து விடுவித்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு விடவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

நீக்கம் தொடர்பான கடிதம் வரும் வரை தான் அதிமுகதான் என்றும், சிறை வைத்தது தன்னை இல்லை, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் கொள்கைகளைத்தான் என்று குறிப்பிட்ட பழனிசாமி, “என்னுடைய கருத்தில் நான் இன்னும் உறுதியாக இருப்பேன். பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் தொண்டர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தரும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். 100 முறை என்னை சிறை வைத்தாலும் என்னுடைய போராட்டம் தொடரும். நான் என்றைக்கும் அதிமுகக்காரன் தான்” என்று கூறினார்.

த.எழிலரசன்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon