மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

பதவியேற்பு விழாவில் லிட்டில் கெஜ்ரிவால்

பதவியேற்பு விழாவில் லிட்டில் கெஜ்ரிவால்

டெல்லி தேர்தலில் 62 இடங்களைப் பிடித்து ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பொதுவாக முதல்வராக ஒருவர் பதவி ஏற்கிறார் என்றால் முக்கிய தலைவர்களுக்கும், முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்

ஆனால் தற்போது தலைவர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என்ற போதிலும் இணையம் மூலம் அனைத்து இதயங்களையும் வென்ற லிட்டில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த லிட்டில் கெஜ்ரிவால்

வாக்கு எண்ணிக்கை அன்று ஆம் ஆத்மி காலை முதலே முன்னிலை வகித்த நிலையில் கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த நாடே டெல்லி தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அவ்யான் தோமர் என்ற ஒரு வயது சிறுவன் அனைவரது கவனத்தை ஈர்த்தான்.

கட்சி அலுவலகம் முன்பு உள்ளூர் தொழிலதிபரும், ஆம் ஆத்மியின் ஆதரவாளருமான ராகுல் தோமர் கட்சியினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது மகனான அவ்யான் தோமர் உற்சாகமாக ஆட்டம் போட்டதை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன.

குறிப்பாக அச்சிறுவன், மீசை வரைந்து, ஆம் ஆத்மி கட்சியின் தொப்பி . மூக்குக் கண்ணாடி மற்றும் மஃப்ளர் ஆகியவை அணிந்துகொண்டு கூட்டத்தில் வலம் வந்தான். அவனை ’லிட்டில் கெஜ்ரிவால்’. ‘பேபி கெஜ்ரிவால்’, ‘மஃப்ளர் மேன்’ என தூக்கிக் கொஞ்சினர்.

பிப்ரவரி 11ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த ஆம் ஆத்மி, ‘மேன் ஆஃப் தி டே’ என்று பதிவிட்டிருந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகப் பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்கச் சிறுவனுக்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது,

கவிபிரியா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon