மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

திருச்சியில் தலைமைச் செயலகம்?

திருச்சியில் தலைமைச் செயலகம்?

எம்.ஜிஆர் கனவை நனவாக்குகிறாரா எடப்பாடி!

தலைமைச் செயலக வட்டாரத்தில் அதிகாரிகளுக்கிடையில் ஓரிரு நாட்களாகவே ஒரு செய்தி இறக்கை கட்டி பறந்துகொண்டிருக்கிறது. நாளை (பிப்ரவரி 14) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் கடைசி முழு பட்ஜெட் தாக்கலாக இருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் பட்ஜெட்டிலோ, பட்ஜெட் கூட்டத் தொடரிலோ சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதில் ஒன்று, தமிழகத்தின் சட்டமன்றத்தை சென்னையில் வைத்துவிட்டு, தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றுவது என்பதுதான்.

தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னை வட மாவட்டங்களுக்கு எளிதில் அணுகக் கூடிய தலைநகராக இருந்தாலும் மதுரையைத் தாண்டியிருக்கும் நெல்லை, குமரி, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு தலைநகரப் பயணம் என்பது தலைவலி மிக்கதாகவே இருக்கிறது. எனினும் தலைமைச் செயலகத்துக்கு வர வேண்டிய கட்டாயம் பல முக்கியப் பணிகளுக்கு இருப்பதால் தென் மாவட்டத்துக்காரர்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதைக் களைய எம்.ஜி.ஆர். தன் ஆட்சிக் காலத்தில் திருச்சியை தலைநகராக மாற்றுவதாக முடிவெடுத்தார். 1983 ஆம் ஆண்டு திருச்சியை தலைநகராக்கும் திட்டத்தை எம்ஜிஆர் அறிவித்தார்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கும், குடிநீர் பற்றாகுறைக்கும் இது நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று நம்பினார் எம்.ஜி.ஆர். அவரது இந்த முடிவுக்கு திமுக தலைவர் கலைஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனாலும் திருச்சி அண்ணாநகர் நவல்பட்டு பகுதியில் தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியை அமைக்க எம்.ஜி.ஆர். முயற்சித்தார். ஆனால் உடல் நிலை கோளாறு, இந்திரா காந்தி மரணம் உள்ளிட்ட மேலும் சில அரசியல் காரணங்களால் எம்.ஜி.ஆரின் திருச்சி தலைமைச் செயலக முடிவு கைவிடப்பட்டது. பின் அவ்வப்போது திருச்சி தலைநகரம் என்ற கோரிக்கை எழுவதும் விழுவதுமாக இருக்கிறது.

மிகச் சமீபத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தியது திருச்சி மக்களவை உறுப்பினரான திருநாவுக்கரசர். ஜனவரி 31 ஆம் தேதி அவர் அளித்த பேட்டியில், “எம்ஜிஆர் காலத்தில் திருச்சியை தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் ஆக்குவது குறித்து பேச்சு இருந்தது. தற்போது கூட தலைநகரை முழுமையாக திருச்சிக்கு மாற்றுவது என்பதை விட, சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் சில அலுவலகங்களை திருச்சிக்கு மாற்ற முடியும். மேலும் அரசின் புதிய திட்டங்கள், கட்டுமானப் பணிகள், தனியார் பெரு நிறுவனங்களை திருச்சியில் தொடங்கும்படி செய்யலாம்.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு அண்மையில் நான் எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத் துறையை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவுக்கு திருச்சியை தலைநகர் ஆக்கும்படி கேட்டுக் கொண்டேன். அங்கிருந்து நேர்மறையான எதிர்வினை எனக்குக் கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார் திருநாவுக்கரசர்.

. இந்நிலையில் எம்ஜிஆரின் கனவை நனவாக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் தொடரில், ‘சட்டமன்றம் சென்னையிலேயே இருக்கும், தலைமைச் செயலகம் திருச்சிக்கு மாற்றப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் பேசிக் கொள்கிறார்கள்.

தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகள் சிலரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘அப்படி ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை’ என்றனர். ஆனால் தலைமைச் செயலகத்தில் இருக்கும் சில அதிகாரிகள் தங்களின் திருச்சி நண்பர்களுக்கு போன் செய்து, ‘திருச்சியில உங்களுக்கு நிலம் இருக்கா. அப்படி நிலம் இருந்தா, இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கு கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி காத்திருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆக பட்ஜெட்டில் திருச்சி பற்றிய அறிவிப்பு வருமா, அல்லது எம்ஜிஆர் கனவு கனவாகவே இருக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

-ஆரா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon