மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

கேஜ்ரிவால் பதவியேற்பு விழா: தலைவர்களுக்கு அழைப்பில்லை!

கேஜ்ரிவால் பதவியேற்பு விழா: தலைவர்களுக்கு அழைப்பில்லை!

அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களைப் பெற்று அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. கடந்த முறை 3 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, இந்த முறை 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 2013ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

இதனையடுத்து, மூன்றாவது முறை டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 16ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொறுப்பேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கேஜ்ரிவால் அமைச்சரவையில் பழைய அமைச்சர்களே மீண்டும் தொடரவுள்ளனர். அதிஷி மற்றும் ராகவ் சாதா உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிதாக யாரும் அமைச்சராக வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளும் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தலைவர்கள் யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் கூறுகையில், “டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள பிற மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாவருக்கும் அழைப்பு அனுப்பப்படாது. கேஜ்ரிவாலின் தலைமை மீது நம்பிக்கை வைத்த டெல்லி மக்கள் முன்னிலையில் முதல்வராக பதவியேற்றுக்கொள்வார்” என்று தெரிவித்துள்ளார்.

த.எழிலரசன்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon