மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

முதல்வர் அறிவிப்பில் சந்தேகம்: ஒப்புக்கொண்டாரா அமைச்சர்?

முதல்வர் அறிவிப்பில் சந்தேகம்: ஒப்புக்கொண்டாரா அமைச்சர்?

மீத்தேன் தொடர்பான அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு திமுக பதிலளித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாக சேலம் தலைவாசலில் கடந்த 9ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும். இந்த சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை” என்று சாடியிருந்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உள் நோக்கம் கற்பிக்கும் வகையில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுக அரசு தான் தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு வித்திட்டது. ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வுப் பணி துவங்க, 4 ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது திமுகதான். ஸ்டாலின் முன்னிலையில் தான், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என்று விமர்சித்தார்.

மேலும், “அன்று டெல்டா விவசாயிகளை பாதுகாக்க தவறிய திமுக, தற்போது முதலமைச்சரின் துணிச்சலான அறிவிப்பிற்கு கிடைத்த வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமல், மக்களை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் செயலை செய்கிறது” என்றும் சாடியிருந்தார்.பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக மு.க.ஸ்டாலின் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்திற்குமான உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய தனிச்சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக பதில்

இதற்கு பதிலளித்து இன்று (பிப்ரவரி 13) அறிக்கை வெளியிட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதிய சட்டம் இயற்றப்படும் என்றதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“முதலமைச்சர் வெளியிட்ட “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல” அறிவிப்பில் சந்தேகங்கள் பல உள்ளன என்பதை முதன் முதலில் அமைச்சர் ஒருவரே ஒப்புக் கொண்டிருப்பது எங்கள் கழக தலைவரின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும், விவசாயிகளுக்காக அவர் எழுப்பிய உரிமைக்குரலையும் நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி,

“மீத்தேன் திட்டம் குறித்து எங்கள் தலைவர் மட்டுமின்றி, திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே அத்திட்டம் குறித்து விளக்கப்பட்டு விட்டது. இதை ஏதோ அதிமுக எதிர்த்தது போல் திரு ஜெயக்குமார் கூறியிருந்தாலும், அதிமுகவின் இணைய தளத்திலேயே இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டன என்பதையும்- குறிப்பாக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா இத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வத்துடன் பரிசீலித்துக் கொண்டிருந்தார் என்ற செய்தியையும் வசதியாக மறந்து விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பாக ஸ்டாலின் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்கு ஜெயக்குமா் பதில் அளிக்கவில்லை என்று சாடிய பாரதி, “குறிப்பாக அவரே மத்திய அரசுக்கு எடுத்துச் சென்ற முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கூட சொல்ல அவரால் முடியவில்லை. அந்தக் கடிதம் வேளாண் மண்டலம் தொடர்புடையதா? அல்லது “சொந்த விஷயங்களுக்காக”கொடுக்கப்பட்ட கடிதமா? பொதுப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை முதலமைச்சர் வெளியிடத் தயங்குவது ஏன்? மாநில அரசே இதற்குச் சட்டம் இயற்ற முடியும் என்றால் எதற்காக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தார் என்பதற்காக சேலம் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைத்தது, கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் அமைக்கும் பணியை எதிர்த்து போராடிய பேராசிரியர் ஜெயராமன் மீது தேச துரோக வழக்குப் போட்டு கைது செய்தது, அவரது தந்தையின் மரணத்திற்கு கூட ஜாமீன் கொடுக்க மறுத்தது அதிமுக அரசா இல்லையா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியவர், “இவ்வளவு அராஜகங்களை நிகழ்த்திவிட்டு, இப்போது இந்த அறிவிப்பு வெளியிட்டது ஏன்? உள்ளாட்சி தேர்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிற்கு கொடுக்கப்பட்ட மரண அடிதானே? அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே மரண அடி தொடரப் போகிறது என்பதற்குத்தானே இப்போது புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கமாட்டோம் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்” என்றும் சாடியுள்ளார்.

த.எழிலரசன்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon