மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 24 பிப் 2020

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி: இனி மக்களுக்கும் தெரியும்!

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி:   இனி மக்களுக்கும் தெரியும்!

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் குற்றப் பின்புலம் குறித்து மக்களுக்கு ஊடகங்களிலும், நாளேடுகளிலும் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயே உச்ச நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அஸ்வினி உபாத்யாயே மற்றும் ராம்பாபு சிங் தாகூர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் இன்று (பிப்ரவரி 13) தீர்ப்பு வழங்கிய ரோஹின்டன் பாலி நாரிமன், ரவிந்திர பாட் அமர்வு, “குற்றப்பின்னணி அல்லது குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அரசியல் கட்சிகள் அனுமதித்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

அப்பழுக்கற்ற ஒருவரை வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய வலைதள பக்கங்களில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், “குற்றப் பின்னணி உடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தை செய்தித்தாள், சமூக ஊடக தளங்கள் மற்றும் தங்களின் வலைத்தளங்களில் கூறும்போது, வேட்பாளர்களின் நற்சான்றிதழ்கள், சாதனைகள் மற்றும் அவர்கள் செய்த குற்றங்களின் விவரங்களையும் வெளியிட வேண்டும்” என்று தெரிவித்தனர்.

மக்களவை அல்லது சட்டமன்ற வேட்பாளரை தேர்ந்தெடுத்த 48 மணி நேரத்திற்குள்ளோ அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்போ அல்லது இவற்றில் எது முதலில் வருகிறதோ அதற்குள் அனைத்தையும் பதிவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த உத்தரவை பின்பற்றத் தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஒருவேளை அரசியல் கட்சிகள் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டனர்.

த.எழிலரசன்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon