துர்கா இல்லம் டூ அறிவாலயம்: நாகை திமுகவில் நடப்பது என்ன?

politics

துர்கா ஸ்டாலின் வீட்டின் முன் ஆட்களைத் திரட்டி ஆர்பாட்டம் செய்ய வைத்த மாவட்டப் பொருளாளரையும், மாவட்டப் பொறுப்பாளரையும் நீக்க வேண்டும் என்று நாகை வடக்கு மாவட்ட திமுகவினர், அறிவாலயத்துக்கு சென்று ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்களாய் சென்னையிலேயே முகாமிட்ட நாகை வடக்கு மாவட்ட திமுகவின் பெரும்பான்மையான நிர்வாகிகள் நேற்று (பிப்ரவரி 11) மாலை அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்தித்தனர்.

அப்போது, “நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் நிவேதா முருகன், மாவட்டப் பொருளாளராக இருக்கும் ஜி.என். ரவி ஆகியோரை தொடர்ந்து பதவியில் நீடிக்கவிட்டால், வர இருக்கும் உள்கட்சித் தேர்தல் அமைதியாக இருக்காது. அதனால் அவர்கள் இருவரையும் நீக்க வேண்டும்” என்று ஸ்டாலினிடம் மனு அளித்தனர். மேலும், “சீர்காழி அருகே திருவெண்காட்டில் இருக்கும் தலைவரின் மாமனார் வீட்டில் ஆர்பாட்டம் நடத்தி கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்கியதில் நிவேதா முருகனுக்கு பங்கிருக்கிறது” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை அறிவாலயத்தில் நாகை வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேல், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், சீர்காழி சேர்மன் கமலஜோதியின் கணவரான முத்து தேவேந்திரன், தலைமைச் செயற்குழு ராம இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்செல்வன், கலைச்செல்வி ஜெயராமன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், மணல்மேடு பேரூர் செயலாளர் விஸ்வநாதன், பொறையார் (தரங்கம்பாடி) பேரூர் செயலாளர் வெற்றிவேல் , முன்னாள் எம்.எல்.ஏ. பால அருட்செல்வன் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் அறிவாலயத்துக்கு நேற்று படையெடுத்தனர்.

ஏற்கனவே சீர்காழி ஒன்றிய திமுகவில் வெடித்து வரும் விவகாரங்கள் பற்றி, மின்னம்பலத்தில் [துர்கா வீட்டை முற்றுகையிட்ட திமுகவினர் ](https://minnambalam.com/politics/2020/01/08/62/dmk-cadres-assembled-in-front-of-durka-stalin-house) என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

நாகை வடக்கு மாவட்டத்தில் இருக்கும் சீர்காழி ஒன்றியத்தில் நாகை வடக்கு மாவட்டப் பொருளாளராக இருக்கும் ரவியின் மனைவியை சேர்மன் ஆக்குவது என்று மாவட்டப் பொறுப்பாளர் முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுக்குப் பின் மேலையூர் முத்து தேவேந்திரனின் மனைவி கமலஜோதியை சேர்மனாக்க துர்கா ஸ்டாலினிடமிருந்து பரிந்துரை வந்ததாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 8 காலை திருவெண்காட்டில் இருக்கும் துர்கா ஸ்டாலின் வீட்டின் முன்பாக ரவியின் ஆதரவாளர்களும் மீனவர் சமூகத்தினரும் நூற்றுக் கணக்கில் திரண்டனர். இந்தப் புகைச்சல் இன்று வரை தொடர்கிறது.

இந்நிலையில், “முத்து தேவேந்திரனின் மனைவி கமலஜோதி சேர்மன் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் மாவட்டப் பொருளாளராக இருக்கும் ஜி.என். ரவி அவருக்கு ஓட்டுப் போடவில்லை. கட்சிக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார். இவருக்கு ஆதரவாக மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் இருக்கிறார். துர்கா ஸ்டாலின் வீட்டின் முன் போராட்டம் என்ற என்ற நிலைக்கே நிவேதா முருகன் தான் காரணம். மேலும் சீர்காழி ஒன்றியத்தில் மட்டுமல்ல, இன்னும் நாகை வடக்கு மாவட்டத்தின் பல ஒன்றியங்களில் மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் தவறான வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார். இதன் மூலம் பொது சமூகத்தில் திமுகவுக்கான நற்பெயர் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகனையும், பொருளாளர் ஜி.என்.ரவியையும் மாற்றினால் மட்டுமே பொதுத் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க முடியும். இல்லையெனில் கட்சியின் அமைப்புத் தேர்தலிலேயே பலத்த சிக்கல்கள் ஏற்படும்” என்று ஸ்டாலினிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.

அவர் இதை முதன்மைச் செயலாளர் நேருவிடம் விளக்கும்படி அனுப்பியுள்ளார். நேற்று மாலையே அறிவாலயத்தில் முதன்மைச் செயலாளர் கே.என். நேருவையும் சந்தித்து நாகை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முறையிட்டனர்.

‘இதப் பத்தி விசாரிக்க குழு அமைக்கிறேன்’ என்று நேரு சொல்ல, ‘மாவட்டப் பொறுப்பாளரை நீக்கிவிட்டு பொறுப்புக் குழு போடுங்க. அப்பதான் உட்கட்சித் தேர்தல் முறையா நடக்கும். மெஜாரிட்டி நிர்வாகிகள் இங்க இருக்கோம். மாவட்டப் பொறுப்பாளருக்கு ஆதரவா இருக்கிற நிர்வாகிகள் மிகக் குறைவான பேர்தான். எனவே ஜனநாயகத்துக்கு மதிப்பு கொடுத்து பொறுப்புக் குழு போடுங்க. இல்லேன்னா வேற பொறுப்பாளரை போடுங்க’ என்று கேட்டிருக்கிறார்கள் நிர்வாகிகள். துர்கா ஸ்டாலினின் சொந்த ஒன்றியம், சொந்த மாவட்டம் என்பதால் நேரு அவர்களை பக்குவமாக பேசி அனுப்பியிருக்கிறார்.

இதுபற்றி மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசினோம். “நிவேதா முருகனை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்க ஆதரவு கொடுத்ததே இப்போது புகார் சொல்லியுள்ளவர்கள்தான். தலைமை கேட்கும் பட்சத்தில் தன் தரப்பு விளக்கத்தை நிவேதா அளிப்பார். மேலும் நிவேதா முருகனுக்கு தற்போது எ.வ.வேலு ஆதரவாக இருப்பதால் அவ்வளவு எளிதில் பதவியில் இருந்து மாற்றிவிட முடியாது. துர்கா தரப்பு தனக்கு எதிராகத் திரும்புகிறது என்று உணர்ந்தபோதே எ.வ. வேலுவிடம் தஞ்சம் அடைந்துவிட்டார் நிவேதா” என்கிறார்கள்.

ஸ்டாலின், நேருவை சந்தித்த நாகை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளில் சிலர், அதற்கு முன்பே துர்காவை சென்று சந்தித்திருக்கிறார்கள். அதன் பிறகே தலைமையிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். “இது நாங்கள் கொடுக்கும் புகார் அல்ல. அக்கா ஃபார்வர்டு பண்ணிய புகார். எனவே புகாருக்கு விரைவில் நடவடிக்கை இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அவர்கள்.

**-ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *