rகாங்கிரஸ்- பாஜகவுக்கு எதிராக மினி இந்தியா!

politics

70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட டெல்லிக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி இரவு வரை நீடித்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வந்தது.

இந்நிலையில், ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் டெல்லியில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.

அதன்படி மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியமைக்கவுள்ளது. எனினும் கடந்த 2015 தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் 5 இடங்களில் தோல்வியடைந்துள்ளது ஆம் ஆத்மி. 2015ல் 67 இடங்களில் வெற்றி நிலையில் இந்த தேர்தலில் 62 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அதுபோன்று பாஜக 2015ல் 3 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் 2020ல் கூடுதலாக 5 தொகுதிகளைப் பிடித்து 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜக வேட்பாளர்களுக்கும், ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கும் இடையே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவி வந்தது. குறிப்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் 11ஆவது சுற்றுக்கு மேல் ஆயிர வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர், பட்பர்பஞ்ச் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங் நேகி களம் கண்டார். முதல் 10 சுற்றில் ரவீந்தர் சிங் முன்னிலை வகித்து வந்த நிலையில் 11ஆவது சுற்றுக்கு மேல் மணிஷ் சிசோடியா முன்னிலை வகித்தார். எனினும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். 2015ல் 28,791 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2020ல் 3,207 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார். இது தேர்தலில் வெற்றியடைந்த ஆம் ஆத்மி அமைச்சர்கள் பெற்ற வாக்குகளை விடவும் குறைவாகும்.

அதுபோன்று கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வாக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த தேர்தலில் 31,583 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி முதல்வர், இந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சுனில்குமார் யாதவை விட 21,697 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

முதல்வர், துணை முதல்வரைக் காட்டிலும் ஆம் ஆத்மி அமைச்சர்கள் பலர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக சீமாபுரியில் போட்டியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் அனைவரையும் காட்டிலும், 56,108 வாக்குகள் பெற்று மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார். அதுபோன்று அதிகபட்சமாக 71.58 சதவிகித வாக்குகள் விழுந்த பாலிமரன் தொகுதியில் உணவு மற்றும் சிவில் சப்ளைத் துறை அமைச்சர் இம்ரான் உசேன் 36,172 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொழிலாளர் துறை அமைச்சர் கோபால் ராய் 33,062 வாக்குகள் வித்தியாசத்தில் பாபர்பூர் தொகுதியில் வெற்றி கண்டார். இவர்களை ஒப்பிடும் போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மணிஷ் சிசோடியாவுக்கும் வாக்கு விகிதம் குறைந்துள்ளது.

இதுஒரு பக்கம் என்றால் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. 2020 தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம், ‘டெல்லி என்பது மினி இந்தியா போன்றது. எனவே இந்தத் தேர்தல் முடிவுகளை அகில இந்திய மனநிலைக்கு நெருக்கமானதாகக் கருதலாம்’ என்று கூறியிருக்கிறார். பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு என்ற அடிப்படையில் சிதம்பரம் இதைச் சொன்னாலும், காங்கிரஸுக்கு பாஜகவை விட கடுமையான எதிர்ப்பு இந்திய அளவில் இருக்கிறது என்பதையும் சொல்லாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார் ப.சி.

இதன் அடிப்படையில் பார்த்தால் மினி இந்தியாவின் மனநிலை காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்று தேடுகிறதா என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.

-கவிபிரியா

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *