மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

அதிமுக வெற்றி: தர்ணாவில் ஈடுபட்ட கனிமொழி

அதிமுக வெற்றி: தர்ணாவில் ஈடுபட்ட கனிமொழி

கோவில்பட்டியில் அதிமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி போராட்டத்தில் ஈடுபட்டார்.

பல்வேறு காரணங்களுக்காக மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு ஜனவரி 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 26 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளுக்கும் இன்று (ஜனவரி 30) காலை தேர்தல் துவங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 இடங்களில் திமுக 8 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றிபெற்றன. தேமுதிக, சிபிஐ ஆகியவை தலா 1 இடத்தையும், சுயேச்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றின. இதில் திமுகவுக்கு 10 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஒன்றியத் தலைவர் பதவியிடத்திற்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர் கஸ்தூரி 10 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் பூமாரி 9 வாக்குகளே பெற்றார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தேர்தல் அதிகாரி உமாசங்கருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் அவர்களை காவல் துறையினர் கூட்ட அரங்கிலிருந்து வெளியேற்றினர்.

உடனடியாக அங்கு விரைந்த தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். திமுகவுக்கு 10 பேர் வாக்களித்துள்ள நிலையில் எப்படி அதிமுக வெற்றிபெற்றதாக அறிவிக்க முடியும் என்ற கனிமொழி கேள்வி எழுப்ப, தேர்தல் முறைப்படிதான் நடைபெற்றது என அதிகாரி பதிலளித்தார். மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கனிமொழி வலியுறுத்த, அதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென மறுத்துவிட்டார் தேர்தல் அதிகாரி.

இதனைத் தொடர்ந்து கனிமொழி தலைமையில் கீதா ஜீவன், திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் பசுவந்தனை சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தேர்தல் அதிகாரிக்கு தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கடந்த முறை தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு திமுக கவுன்சிலர்களை மிரட்டி அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்தினர். அதனையெல்லாம் கடந்து 10 பேரும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

9 பேர் மட்டுமே அதிமுகவுக்கு வாக்களித்துள்ள நிலையில், அதிமுக வெற்றிபெற்றதாக தவறாக அறிவிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “வாக்களித்த 10 பேரும் திமுகவுக்குத்தான் வாக்களித்தோம் என்று இங்கு இருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய வன்முறை. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கும் தொடருவோம்” என்றும் குறிப்பிட்டார்.

பிற்பகலில் ஒன்றிய குழு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், திமுகவின் போராட்டம் தொடர்ந்தது. துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் தான் அவர்கள் அங்கிருந்து கிளம்பினர். போராட்டத்தின்போது, திமுக மகளிரணியைச் சேர்ந்த லட்சுமி, அவரது மகன் சரவணன் ஆகியோர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே பல இடங்களில் மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக சிவகங்கை திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்காக நடைபெறவிருந்த தேர்தல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றிய பதவிகளுக்கான தேர்தல் போதிய உறுப்பினர்களின் வருகையின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதுபோலவே சேலம் மாவட்டம் ஆலத்தூர் மற்றும் கொளத்தூர் ஒன்றியங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வியாழன் 30 ஜன 2020