மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

குரூப் 4 முறைகேடு: அமைச்சரை டிஸ்மிஸ் செய்யக் கோரிக்கை!

குரூப் 4 முறைகேடு: அமைச்சரை டிஸ்மிஸ் செய்யக் கோரிக்கை!

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்த நிலையில், விசாரணையில் தோண்டத் தோண்ட புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேட்டில் தரவரிசைப் பட்டியல் ரத்து செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு பூதாகரமாக வெடித்துள்ளது. குரூப் 4 தேர்வில் இருந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதில் சிவகங்கையைச் சேர்ந்த சித்தாண்டி என்ற போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துக்கு அரசு வேலை வாங்கிக் கொடுக்க முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இந்த நிலையில் சித்தாண்டி தம்பியை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தாண்டி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த சிவகங்கைச் சென்றுள்ள சிபிசிஐடி போலீசார் அவரின் சகோதரரும், காரைக்குடி சார்-பதிவாளருமான வேல்முருகனை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு குரூப்-2 ஏ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர் ஆவார்.

இதனிடையே, குரூப் 4 தேர்வைப் போல், ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் 2ஏ தேர்வை முறைகேடாக எழுதி வெற்றி பெற்று தற்போது அரசுப் பணியில் உள்ள 37 அதிகாரிகளை, விசாரணைக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. 1,953 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து இம்முடிவை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது.

இதன் மூலம் அந்த தேர்வில் முதல் 37 இடங்களில் தேர்வான 24 பெண்கள் மற்றும் 13 ஆண்களை விசாரணைக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சி சம்மன் அனுப்பவுள்ளது. இவர்கள் வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். இதில் முறைகேடு நடந்தது உறுதியானால் அவர்களது தரவரிசைப் பட்டியல் ரத்து செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலைக்கான தேர்வுகளில் முறைகேடு நடந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், துறை அமைச்சரான ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், “தரகர்களின்” புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

“குரூப் 4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள்” வெளிச்சத்திற்கு வந்து, அதன் காரணமாக, தமிழக இளைஞர்கள் இந்த ஆணையத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டிருந்த நேரத்தில், “113 மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு 33 விண்ணப்பதாரர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்த பட்டியலை” சென்னை உயர் நீதிமன்றமே ரத்து செய்திருப்பது, அதிமுக ஆட்சியின் அவலட்சணங்களின் முத்தாய்ப்பாக விளங்குகிறது” என்று விமர்சித்துள்ளார்.

“தேர்வு மையத்திலும், அதைத் தாண்டியும் இது போன்ற மோசடிகள் எப்படி நிகழ்ந்தன என்ற “உண்மைத் தகவல்” இதுவரை வெளியில் வரவில்லை. குரூப் 4 தேர்வில் “வெளிப்படைத் தன்மை” விலை பேசப்பட்டு - லட்சக்கணக்கான ரூபாய்க்கு பேரம் பேசி விற்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்து 25 நாட்களுக்குப் பிறகு பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திடீரென்று ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இத்தனை நாள் அமைச்சர் எங்கே போயிருந்தார்? யாருக்காக “சூப்பர் ஸ்போக்ஸ் மேனாக”ப் பணியாற்றி - இந்த முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் அமைதி காத்தார்? இப்போது ஏன் தேர்வாணைய அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்?

அது மட்டுமின்றி, சிபிசிஐடி விசாரணை முடியும் முன்பே, ஒரு தேர்வு மையத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வைத்து எப்படி அனைத்துத் தேர்வர்களின் முடிவையும் ரத்து செய்ய முடியும் என்று ஏன் கேள்வி கேட்கிறார்? ஏற்கனவே காவல் துறை உதவி ஆய்வாளர் தனது குடும்பத்தில் உள்ளவர்களை எல்லாம் தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளார் என்றும், அவர் அதிமுக அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் போலீசார் நெருங்க முடியவில்லை என்றும் கூறப்படும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் விசாரணையைத் திசை திருப்பும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாரா?” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.

அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 22,250 பேர் குரூப் 4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்ச எண்ணிக்கையாக 17,648 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20 கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாகப் பட்டியலிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விபரீத விளையாட்டை இளைஞர்களின் எதிர்காலத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு நிகழ்த்தியிருக்கிறது. ஆகவே குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வியாழன் 30 ஜன 2020