சிஏஏவுக்கு எதிரான ஐரோப்பிய யூனியன் தீர்மானங்கள் தள்ளிவைப்பு!

politics

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் டிப்ளமேட்டிக் முயற்சிக்குக் கிடைத்த தற்போதைய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

சிஏஏ மற்றும் காஷ்மீர் குறித்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஐந்து கண்டனத் தீர்மானங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இந்த வாரத்தில் நடப்பதாக இருந்தது. இதற்கிடையில் இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் டேவிட் பசாலிக்கு எழுதிய கடிதத்தில், ‘இன்னொரு நாட்டு நாடாளுமன்றத்தின் இறையாண்மையில் தலையிடாதீர்கள்’ என்று கோரிக்கைக் கடிதம் எழுதியிருந்தார்.

அதே நேரம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதர் கைத்ரி இசார் குமார் தலைமையிலான இந்தியக் குழுவினர், கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்திருந்த ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றக் குழுவினருடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

“வரும் மார்ச் 13ஆம் தேதி இந்திய – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இந்த நிலையில் இப்படிப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் இரு தரப்புக்குமான அரசியல் உறவுகள் பாதிக்கப்படும். எனவே குறைந்தபட்சம் இந்த உச்சி மாநாடு நடக்கும் வரையிலாவது இந்தத் தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் தவிர்க்கப்படலாம்” என்று இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.

இதன் விளைவாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கடந்த புதன்கிழமை கூடியபோது இந்தத் தீர்மானங்களை மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரையிலான கூட்டத் தொடரில் எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தியாவுக்கான உலகத் தலைவலி தற்காலிகமாகத் தீர்ந்துள்ளது.

வாக்களிப்பதை ஒத்திவைப்பது இந்தியாவுக்கான ராஜதந்திர வெற்றி என்று இந்திய அரசாங்கத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன. “ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்திய நண்பர்கள் இருப்பது போலவே பாகிஸ்தான் நண்பர்களும் இருக்கின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் எம்.பி. ஷாஃபாக் அகமதுதான் இந்தத் தீர்மானங்களின் பின்னணியில் இருக்கிறார்” என்றும் இந்தியத் தரப்பு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கிக் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *