Dகோபம் குறையாத டி.ஆர். பாலு

politics

திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.என். நேருவை அக்கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் முதல் அறிவாலயத்தின் ஊழியர்கள், ஆகப் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், பல்வேறு நிர்வாகிகள் என பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.

ஆனால் இதுவரை தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக இருந்தவரும் திமுக மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மட்டும் இன்னும் நேருவுக்கு வெளிப்படையாக வாழ்த்து தெரிவிக்கவில்லை. காரணம் அவருக்கு இருக்கும் வருத்தம்தான்.

[முதன்மைச் செயலாளர் நேரு; போராடிய ஸ்டாலின்](https://www.minnambalam.com/politics/2020/01/26/117/knnehru-dmk-fourth-important-leader-stalin-appoint) என்ற தலைப்பில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் நாம் வெளியிட்ட செய்தியில்… நேருவை இப்பதவியில் நியமிக்கும் முன் டி.ஆர்.பாலுவை சமாதானப்படுத்த ஸ்டாலின் எடுத்த முயற்சிகளைக் குறிப்பிட்டிருந்தோம். ஸ்டாலினிடம் கோபித்துக் கொண்டு போன டி.ஆர்.பாலுவுக்கு இன்னும் வருத்தம் குறையவில்லை என்கிறார்கள்.

டி.ஆர்.பாலுவிடம் வாழ்த்து வாங்குவதற்காக அவரை சந்திக்க நேரம் கேட்டு நேரு போன் போட்டிருக்கிறார். ஆனால் பாலு போனை எடுக்கவில்லை. ஸ்டாலின் குடும்பத்தினரின் அனைவரது மொபைல் எண்ணும் டி.ஆர்.பாலுவுக்குத் தெரியும். ஆனால், ஸ்டாலின் குடும்பத்தினர் கூப்பிட்டும் போனை எடுக்கவில்லை பாலு. குடியரசு தினத்தன்று தனது ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். பொது நிகழ்சிச்சிகளில் இப்படி கலந்துகொண்டாலும் ஏனோ தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பேச விரும்பவில்லை பாலு. ஆனாலும் பொருளாளர் துரைமுருகனுக்கு அவராகவே போன் செய்திருக்கிறார்.

‘என்னய்யா இப்படி பண்ணிட்டீங்க. முதன்மைச் செயலாளராக நேரு அறிவாலயம் வர்றப்பப்ப நீங்க வந்திருக்க வேணாமா? வருத்தம் இருந்தாலும் வந்திருக்கணும். அதில்லாம சாவிய வேற எடுத்துட்டுப் போயிட்டீங்களே?” என்று துரைமுருகன் கேட்க அதற்கெல்லாம் பதில் சொல்லாத பாலு, “நான் பொறுப்புக்கு வந்த பிறகு அந்த ரூம்ல செல்ஃபுகள் புதுசா செஞ்சு வச்சிருந்தேன். அதை எடுத்து வெளிய வைக்கச் சொல்லுங்க. நான் ஆள் வச்சி எடுத்துக்கறேன்” என்று கோபம் அடங்காமலேயே பேசியிருக்கிறார் பாலு.

டி.ஆர்.பாலுவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசியபோது, “அண்ணன் ரொம்ப வருத்தத்துல இருக்காரு.நேருவுக்கு பொறுப்பு கொடுப்பதைப் பற்றி சொல்லும்போதே… வட தமிழக முதன்மைச் செயலாளர், தென் தமிழக முதன்மைச் செயலாளர்னு ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அப்படின்னா நான் சரியாக வேலை செய்யலையான்னு கேக்குறார் பாலு. நேருவுக்கு துணைப் பொதுச் செயலாளர் போல வேற எந்த பதவியாவது கொடுக்கட்டும். ஏன் என் பதவியைப் பறிச்சு கொடுக்கணும் என்பதுதான் அவரின் கோபமும் வருத்தமும். நாடாளுமன்றத்துல திமுக மூன்றாவது பெரிய கட்சியா இருக்குற நிலையில, டி.ஆர் .பாலுவுக்கு துணை சபாநாயகர் பதவி வர்றதுக்கும் வாய்ப்பிருக்கு. இந்த நேரத்துல தலைவர் மேல இப்படி கோவிச்சுக்கிட்டு போயிட்டாரே” என்று வருத்தப்படுகிறார்கள்.

புதிய முதன்மைச் செயலாளர் கே.என். நேருவுக்கு டி.ஆர்.பாலு வாழ்த்து சொல்லாவிட்டாலும், அவரது மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டரில், “கழக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருமை மாமா கே.என். நேரு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று வாழ்த்தியுள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *