மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

கருப்பணனை நீக்க வேண்டும்: ஆளுநரிடம் திமுக புகார்!

கருப்பணனை நீக்க வேண்டும்: ஆளுநரிடம் திமுக புகார்!

அமைச்சர் பதவியிலிருந்து கருப்பணனை நீக்க வேண்டுமென ஆளுநருக்கு திமுக சார்பில் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. ஈரோடு மாவட்டம் சென்பகப்புதூரில் நேற்று நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் இதனை சுட்டிக்காட்டி பேசிய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன், “உள்ளாட்சித் தேர்தலில் மாற்றி ஒட்டு போட்டதால் தான் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். சத்தியமங்கலத்தில் திமுக சேர்மன் வந்துவிட்டார். ஆனால், ஆளும்கட்சியான அதிமுக பணம் கொடுத்தால்தானே அவர்களால் வேலை செய்ய முடியும். பணம் கொடுக்கவில்லை என்றால் என்ன வசதி செய்து தருவார்கள். அவர்களுக்கு நாங்கள் பணம் குறைவாகத்தான் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திமுகவிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் ஆட்சி மரபை மீறி அமைச்சர் கருப்பணன் பேசியுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் இன்று (ஜனவரி 26) கடிதம் எழுதியுள்ளார். அதில், “அதிமுக அமைச்சரான கருப்பணன், ஈரோடு மாவட்டத்தில் 25.01.2020 அன்று காலை 11 மணிக்கு நடந்த பொது நிகழ்ச்சியில் பிரிவினை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், அவதூறாகவும், பொறுப்பற்ற முறையிலும் பேசியுள்ளார் என்பதை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்” என்று கூறி கருப்பணன் பேசியதன் எழுத்து வடிவத்தையும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்துள்ளார்.

மேலும், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் உள்ளாட்சி பிரதிநிதிகளை பழிவாங்கும் விதத்தில் அமைச்சர் பேசியிருப்பதன் மூலம், திமுக பிரதிநிதிகள் உள்ள இடங்களுக்கு ஆளும் அதிமுக அரசு போதிய நிதியை ஒதுக்காது என்பது தெரியவருகிறது. அமைச்சரின் பேச்சு அரசியலமைப்பு அறநெறிக்கு முரணானது மட்டுமல்லாமல், பதவியேற்பின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. தனது கட்சியைச் சார்ந்த வேட்பாளரை தேர்வு செய்யாததால், நிதியை குறைத்துதான் கொடுப்போம் என அமைச்சர் பேசியிருப்பது, மக்களை துன்பப்படுத்துவதற்கான அவரின் நேரடி அச்சுறுத்தல் என்றே கருதமுடியும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நபர்கள் அமைச்சரவையில் நீடிக்க அனுமதி அளித்தால், அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் எனவும், இது அரசியல் அமைப்பின்படி நடைபெறும் அரசு அல்ல என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுவார்கள் எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ள துரைமுருகன், “அரசியலமைப்புச் சட்டம் 164-இன் கீழ் ஆளுநரின் அதிகாரத்தை பயன்படுத்தி கே.சி.கருப்பணனை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கி உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon