rஓபிஆர் கார் முற்றுகை: எச்சரிக்கும் போலீஸ்!

politics

அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் நேற்று இரவு (ஜனவரி 23) போராட்டம் நடத்தினார்கள். இதனால் தேனி மாவட்டம் கம்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தேனி மக்களவை உறுப்பினரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திநாத் தேனி மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த தினக் கூட்டங்களில் பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று (ஜனவரி 23) கம்பம் நகரில் வஉசி திடலில் அவர் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதற்காக நேற்று இரவு கம்பம் நகருக்குள் நுழைந்தார். கட்சிக்கார்கள் வாகனங்கள் முன்னும் பின்னும் வந்தன. கம்பம் நகர வீதிகளில் ரவீந்திரநாத்தின் கார் வரும்போது சாலையின் இருபுறமும் போலீசார் நின்ற நிலையிலும் திடீரென சுமார் ஐம்பது பேர் மிகச் சரியாக ரவீந்திரநாத்தின் காரைச் சுற்றி வளைத்தனர்.

‘போராடுவோம் போராடுவோம் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற போராடுவோம்’, ‘ஆதரிக்காதே ஆதரிக்காதே குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிக்காதே’ போன்ற முழக்கங்களுடன் இஸ்லாமிய அமைப்பினர் ரவீந்திரநாத் காரைச் சுற்றி அரண் அமைத்தனர். இதைப் பார்த்து அதிர்ந்த ரவீந்திரநாத் வண்டியின் வேகத்தைக் குறைக்கச் சொன்னார். வண்டி மெதுவாக வரும்போது போராட்டக்காரர்களில் சிலர் அவர் கார் கண்ணாடியை சடசடவென தட்டினர். இதைப் பார்த்துப் பதறிய போலீஸார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான முழக்கங்களும், சைரன் ஒலிகளும் கம்பம் நகரில் எழ சில நிமிடங்கள் பதற்றமானது. இந்த சம்பவம் தொடர்பாக நாற்பதுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது தேனி காவல் துறை.

“இதுபோன்ற திடீர் முற்றுகைப் போராட்டங்களை இனி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்கும் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது” என்கிறார்கள் காவல் துறை தரப்பில்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *