நேதாஜி, தேவர், சாவர்க்கர்: வெங்கையாவின் ‘அரசியல்’ பேச்சு!

politics

சுபாஷ் சந்திரபோஸின் 123ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலையை சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று (ஜனவரி 23) திறந்து வைத்தார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட விழாவில் வெங்கையா நாயுடு பேசும்போது முத்துராமலிங்க தேவரையும், சாவர்க்கரையும் நினைவுகூர்ந்தார்.

“இந்த மாநில மக்களுக்கும், இந்திய தேசிய ராணுவத்துக்கும் (INA) இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழகத்தில் சுபாஷ் சந்திரபோஸை பிரபலப்படுத்திய ஒருவர் உண்டு என்றால், அது முத்துராமலிங்கத் தேவர்தான். மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவரான அவர், நேதாஜியின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தார். பார்வர்டு பிளாக்கின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், இந்திய தேசிய ராணுவத்துக்கு பெருமளவு ஆதரவைத் திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகித்தவர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நேதாஜி என்ற தமிழ் வார இதழ் ஒன்றையும் அவர் தொடங்கினார்” என்று குறிப்பிட்டார் வெங்கையா நாயுடு.

மேலும் அவர், “லக்ஷ்மி சுவாமிநாதனும் (கேப்டன் லக்ஷ்மி சாஹல் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்) அனைவரும் அறிந்தவர்தான். இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவு ஒன்றைத் தொடங்கிய அவர், கேப்டன் லக்ஷ்மி சாஹல் என்று அழைக்கப்பட்டார் (அவரது கணவர் பிரேம்குமார் சாஹலும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்). மற்றொரு மலேசிய தமிழ்ப் பெண் ஜானகி ஆதிநாகப்பன், மலேசியாவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக ஆர்வலருமான ராசம்மா பூபாலன் ஆகியோரும், ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்தனர். தமது 14ஆவது வயதில் போஸ் பங்கேற்ற ஒரு பேரணியில் கலந்து கொண்ட ஜானகி, போஸின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, தமது காதில் அணிந்திருந்த விலை உயர்ந்த காதணியை இந்திய தேசிய ராணுவத்துக்கு நிதி திரட்டுவதற்காக வழங்கினார்.

அந்தமான் நிகோபரில் போர்ட் பிளேரில் நேதாஜி தேசியக் கொடி ஏற்றிய 75ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட 150 அடி உயரமான கொடிமரத்தை நான் சமீபத்தில் பார்த்தேன்..

அதேபோல பிரிட்டிஷ் அடக்குமுறைகளுகளுக்கு எதிராக தைரியத்துடன் போராடிய வீர சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் இன்று நான் மரியாதை செலுத்திக்கொள்கிறேன். வீர சாவர்க்கருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, தனிமை சிறையில் 10 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு மனிதாபிமானமற்ற முறையிலான கொடுமைகளுக்கு அவர் ஆளானார். தேசிய நலனுக்காகவும், சுதந்திரப் போராட்டத்துக்காகவும் அவர் ஆற்றிய மதிப்பிட முடியாத பங்களிப்பை, துரதிருஷ்டவசமாக சிலர் சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

நமது வரலாற்றுப் பாடப் புத்தகங்களில், உரிய அங்கீகாரம் தரப்படாமல் உள்ள சர்தார் வல்லபபாய் படேல், வீர சாவர்க்கர் போன்ற தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை முதன்மைப்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்று பேசினார் துணைக் குடியரசுத் தலைவர்.

தொடர்ந்து அவர், “சில காலம் வரை அவருடைய வாழ்க்கை பற்றிய தகவல்கள் புதிராகவே இருந்தன. சமீபத்தில் நேதாஜி தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அரசு வெளியிட்டு, இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் வைத்துள்ளது. உண்மையில் இது பாராட்டுக்குரிய விஷயம். பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய வாழ்க்கை பற்றி நிறைய கண்டறிந்து, இந்த மகத்தான தேசபக்தரின் வாழ்க்கை பற்றியும், பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க ஓய்வின்றி மேற்கொண்ட போராட்டம் பற்றியும், அர்த்தமுள்ள வெளியீடுகளைக் கொண்டு வர இது உதவியாக இருக்கும். நேதாஜியின் 122ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, 2019இல் செங்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தையும் அரசு திறந்து வைத்துள்ளது. அது போன்ற நினைவகங்களும், இந்தச் சிலை போன்ற அடையாளங்களும், இந்த தேசத்தின் நினைவில் நேதாஜியை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்” என்றார் வெங்கையா நாயுடு.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *