திமுக நடத்தும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு!

politics

திமுக சார்பில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மாநாடு வரும் 31ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் ஆளும் அதிமுகவைவிட எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், 12 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடங்களையும், 11 துணைத் தலைவர் பதவியிடங்களிலும், 125 ஒன்றியத் தலைவர், 107 ஒன்றிய துணைத் தலைவர் பதவியிடங்களையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 18) வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வருகிற 31-1-2020 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில், திருச்சி, மணப்பாறை சாலையில் அமைந்துள்ள கேர் கல்லூரி (CARE COLLEGE) வளாகத்தில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் அனைவரும், தங்களுக்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் / பொறுப்பாளர்களை அணுகி, உரிய அனுமதி பேட்ஜ் பெற்று, இம்மாநாட்டில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *