மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ரஜினியை சீண்டும் உதயநிதி

ரஜினியை சீண்டும் உதயநிதி

முரசொலி குறித்த ரஜினிகாந்தின் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.

துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என சொல்லிவிடலாம்” என்று பேசியிருந்தார். இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், முரசொலி நிர்வாக இயக்குனருமான உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால் நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்” என்று ரஜினியை சீண்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சிஏஏவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த நிலையில், அதனை வன்முறை என்று தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். இதற்கு அப்போதே எதிர்வினையாற்றிய உதயநிதி, ‘உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவிட்டு வரவும்’ என்று விமர்சித்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினியை சீண்டியுள்ளார் உதயநிதி.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon