மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

திமுக-காங்கிரஸ் கூட்டணி: போகியா, பொங்கலா?

திமுக-காங்கிரஸ் கூட்டணி: போகியா, பொங்கலா?

திமுகவுக்கும் காங்கிரசுக்குமான கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து இன்று (ஜனவரி 14) தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசரமாக டெல்லிக்கு அழைத்துப் பேசியிருக்கிறார்.

நேற்று காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸின் முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுக கலந்துகொள்ளவில்லை.

மம்தா பானர்ஜி, மாயாவதி போன்ற தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இக்கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டது.

இதுகுறித்து இன்று வெளிவந்திருக்கும் தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “ தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென எங்கள் தலைவர் ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டிய நிலையில், நாங்கள் எப்படி காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும். இடப்பங்கீட்டில் ஏதேனும் குறைகள் இருந்தால் எங்கள் தலைவரை சந்தித்து அவற்றை கே.எஸ்.அழகிரி விளக்கியிருக்கலாம். ஆனால், எங்களை அவர்கள் கேலி செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், “கே.எஸ்.அழகிரியின் அறிக்கைக்குப் பின்னர் உடனே காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை தொடர்புகொண்டு இதுகுறித்துப் பேசினேன். கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையையும் அவருக்கு அனுப்பினேன். பின்னர், என்னை தொடர்புகொண்ட காங்கிரஸ் பொருளாளர் அகமது படேல், தனது அறிக்கைக்கு அழகிரி வருத்தம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், அழகிரியின் அறிக்கையால் ஏற்பட்ட சேதத்தை தவிர்க்க அவர்கள் எதுவும் செய்யவில்லை. அதனால் அக்கட்சி நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாது என்று குலாம் நபி ஆசாத்திடம் தெரிவித்துவிட்டோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் பாலு.

டெல்லி காங்கிரஸ் மேலிடம் உங்களுடன் நல்லுறவைப் பேணும்போது, நீங்கள் ஏன் இந்த அறிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு, “நாங்கள் தமிழகம் பற்றியே கவலைப்படுகிறோம். ஏனெனில் தமிழகம்தான் எங்கள் கட்சிக்கு மிகவும் முக்கியமானது. டெல்லி எங்களுக்கு கப் ஆஃப் டீ போன்றது. கே.எஸ்.அழகிரியின் அறிக்கையால் எங்கள் நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். உண்மையில், காங்கிரஸை அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் மரியாதையுடன் நடத்தினோம்” என்றும் கூறினார். காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனினும் கூட சிறுபான்மையினர் பக்கம் நின்று அவர்களுக்கு ஆதரவாக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

திமுக காங்கிரஸ் கூட்டணியின் முட்டல் மோதல்கள் இப்படி வெட்ட வெளிக்கு வந்துவிட்ட நிலையில் இரு தரப்பிலும் என்ன நடக்கிறது என்று விசாரித்தோம்.

“எம்பி தேர்தலில் திமுக காங்கிரஸ் மெகா வெற்றிபெற்று ஸ்டாலின் உற்சாகத்தில் இருந்தார். வெற்றிபெற்ற சில மாதங்களிலேயே, செல்லகுமார், மாணிக் தாகூர், திருநாவுக்கரசர் போன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள், ‘இந்த வெற்றி காங்கிரஸால்தான் திமுகவுக்கு கிடைத்தது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன் மொழிந்ததற்கான விளைவுதான் இது’ என்று தங்கள் வட்டாரங்களில் பேசிவருவதாக திமுக மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது. இது ஸ்டாலினுக்கு வருத்தத்தையும், உறுத்தலையும் ஏற்படுத்தியது. ஆனாலும் இதை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளாமல் தனக்கு நெருக்கமான திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சிலரிடம் மட்டுமே கூறியிருந்தார். ஆனாலும் காங்கிரஸ் கூட்டணி என்பதில் உறுதியாகவும் இருந்தார்.

இந்த நிலையில் டெல்யில் பிரதமர் மோடி, அமித் ஷா போன்றவர்கள் திமுகவின் முக்கியஸ்தர்களை சந்திக்கும்போது, ‘காங்கிரஸ் கட்சியை ஏன் இன்னும் தூக்கிச் சுமந்துக்கிட்டிருக்கீங்க?’ என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர். சென்னையில் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்திய பேரணியின் முன் வரிசையில் ப.சிதம்பரம் நடந்து வந்தது பற்றி அமித் ஷாவே டி.ஆர்..பாலுவிடம் சாதாரணமாக தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இதையெல்லாம் ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலு அவ்வப்போது எடுத்துச் சொல்லியும் வந்திருக்கிறார்,

இந்த நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுப்பார்கள் என்று பேசிமுடித்துவிட்ட நிலையில் மறைமுகத் தேர்தலுக்கு முதல் நாள் அழகிரி வெளியிட்ட அறிக்கை ஸ்டாலினை கடுமையாக காயப்படுத்திவிட்டது. அதிலும் இந்த அறிக்கையால் தான் சர்ச்சைக்குள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி பெயரையும் சேர்த்து கூட்டறிக்கை என்று வெளியிட்டார் அழகிரி. ஆயினும் அந்த அறிக்கையில் அழகிரி கையெழுத்து மட்டுமே இருந்தது. ராமசாமி கையெழுத்து இல்லை. மறுநாள் இதுகுறித்து அழகிரி சொல்லிய விளக்கம் ஸ்டாலினை சமாதானப்படுத்தவில்லை.

இதுகுறித்து திமுகவினர் அழகிரிக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் விசாரிக்க, ‘ப. சிதம்பரம் சொல்லி கோபண்ணா எழுதிய அறிக்கையைதான் அழகிரி வெளியிட்டார்’ என்று திமுகவினருக்கு சத்தியமூர்த்தி பவனில் இருந்தே தகவல் கொடுத்துள்ளனர். ப.சி தரப்பிலும் திமுக விசாரித்துள்ளது. ‘சிதம்பரம் சொல்வதையெல்லாம் அழகிரி இப்போது கேட்பதே இல்லையே?’ என்று அங்கிருந்து சொல்லியுள்ளனர்.

இது எல்லாமே ஸ்டாலினுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர்தான், டெல்லி சென்றிருந்த டி.ஆர்.பாலுவுக்கு போன் போட்ட ஸ்டாலின், ‘நீங்க காங்கிரஸ் நடத்தும் கூட்டத்துக்கு போக வேண்டாம். குலாம் நபி ஆசாத்கிட்ட இந்த விஷயம் பத்தியெல்லாம் பேசிடுங்க’ என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படியே பாலுவும் குலாம் நபி ஆசாத்திடம் இதுபற்றி விளக்கி அழகிரி வெளியிட்ட அறிக்கையையும் அனுப்பிவைத்தார். அதற்கு குலாம் நபி வருத்தம் தெரிவித்து, ‘நீங்க இந்தக் கூட்டத்துக்கு அவசியம் வரணும். மேடம் உங்க மேல ரொம்ப மதிப்பு வச்சிருக்காங்க’ என்று சொல்ல, அதற்கு பாலு, ‘நாங்களும் மேடம் மீது மதிப்பு வச்சிருக்கோம். ஆனா தமிழ்நாடு காங்கிரஸ் பண்ணதுக்கு நாங்க இப்படி ரியாக்ட் செஞ்சுதான் ஆகணும் சாரி’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் சிஏஏ கூட்டத்துக்குப் பிறகு இதை சீரியசாக எடுத்துக் கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடனடியாக கே.எஸ். அழகிரியை டெல்லிக்கு அழைத்திருக்கிறார். அழகிரி டெல்லி செல்லும் முன்பே கூட்டணி பற்றி வெளியிட்ட அறிக்கைக்கு வருத்தம் தெரிவித்து டெல்லிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

இதற்கிடையில் பொங்கல் வாழ்த்து சொல்லும் மாசெக்களிடமெல்லாம், ‘என்ன காங்கிரஸ் கூட்டணியில இருக்கலாமா வேணாமா?’ என்று ஸ்டாலின் கேட்க, ‘இருந்தால் நல்லதுங்க. இல்லேன்னா ரொம்ப நல்லதுங்க’ என்றே பல மாசெக்களும் நிர்வாகிகளும் சொல்லியிருக்கிறார்கள்.

போகிப் பண்டிகையன்று காங்கிரஸை தொலைத்துவிடலாம், பொங்கலை திமுக கொண்டாடலாம் என்று திமுகவின் பல நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon