மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

டிஜிட்டல் திண்ணை: சட்டமன்றத் தேர்தல் - காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த திமுக

டிஜிட்டல் திண்ணை:  சட்டமன்றத் தேர்தல் - காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த திமுக

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கிய திமுக காங்கிரஸ் கசப்பு டெல்லி வரை நீடிக்கிறது. இன்று ஜனவரி 14ஆம் தேதி வெளியான திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் 12 பக்கங்களில் எங்கு தேடியும், நேற்று காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் டெல்லியில் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டம் பற்றிய செய்தியோ, படமோ கூட இடம்பெறவில்லை. ஆனால் முதல் பக்கத்தில் சிதம்பரம் மோடிக்கு விடுத்திருக்கும் சவால் பற்றிய செய்தியில், ‘குடியுரிமை சட்டம் பற்றிய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது’ என்று பதிவு செய்திருக்கிறது முரசொலி.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்காமல் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து துணைத் தலைவரானது. இந்த விஷயம் பற்றி அழகிரி அறிக்கை அமைச்சர் செய்த மேஜிக்என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிய திமுக நிர்வாகிகள், ‘ஏதோ திமுகதான் காங்கிரசை வஞ்சித்தது போல கே.எஸ்.அழகிரி அறிக்கை விடுகிறார். ஆனால் பல இடங்களில் காங்கிரஸ்தான் திமுகவை வஞ்சித்திருக்கிறது. கூடவே இருந்து புதுக்கோட்டையில் குழி பறித்தார்கள். இதற்கும் மேல் நாம் காங்கிரஸ் மீது அபிமானமாக இருந்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.

நாம் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பேரம்பேச முடியாத நிலையில் வைக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமாகத்தான் காங்கிரசை அடக்கி வைக்க முடியும். இல்லையென்றால் டெல்லி செல்வாக்கு அதுஇது என்று சொல்லி மீண்டும் 50 சீட், 60 சீட் என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.எனவே காங்கிரசுக்கு அதுவும் டெல்லி காங்கிரசுக்கு உரைக்கும் வகையில் ஒரு கடிவாளம் போட வேண்டும்’என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

தனது அந்தமான் பேச்சிலும் சரி, நேற்றைய கொளத்தூர் பொங்கல் விழாவிலும் சரி ஸ்டாலின் பேச்சில், ‘திமுகவால்தான் காங்கிரஸ் வெற்றிபெற்றது என்று காங்கிரசாரே என்னிடம் கூறினார்கள்’என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பின்னணியில்தான் தமிழக காங்கிரஸ் மீதான திமுகவின் கோபம் சோனியாவுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவே நேற்று டெல்லியில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தது திமுக. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். திமுக எதிர்பார்த்தது போலவே இந்தக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாததன் காரணம் பற்றி டெல்லி காங்கிரஸ் புள்ளிகள் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இரு கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் அடுத்தடுத்து பொதுவெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதை வைத்து அல்ல, உள்ளே என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon