மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

வெற்றிக்கு கூட்டணியும் காரணம்: கே.எஸ்.அழகிரி

வெற்றிக்கு கூட்டணியும் காரணம்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸும் திமுகவும் இணைந்த கரங்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் இடப்பங்கீட்டில் திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கடந்த 10ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி தொடர்பாக காங்கிரஸ் நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. கே.எஸ்.அழகிரியின் அறிக்கை காரணமாகவே கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு பதிலளித்திருந்தார்.

இதன் பின்னணியுடன் திமுக-காங்கிரஸ் கூட்டணி: போகியா, பொங்கலா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஜனவரி 14) நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சந்திப்பின்போது கூட்டணி பற்றிய பேச்சும் வந்தது. கூட்டணியைப் பொறுத்தவரை என்னுடைய கருத்தை தலைவரிடம் சொன்னேன். திமுகவும் காங்கிரஸும் இணைந்த கரங்கள். ஸ்டாலினும் நானும் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நெருக்கமானவர்கள். இணைந்த கரங்கள் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை. கூட்டணி நல்ல முறையில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

உங்களுடைய அறிக்கை காரணமாகவே காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என டி.ஆர்.பாலு கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அவர் என்னைவிட அரசியலிலும் வயதிலும் மூத்தவர். அவருடைய கருத்துக்கு பதில் கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. குடும்பம் என்று இருந்தால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும். ஆனால், எங்கள் குடும்பத்தின் வருத்தமும் கோபமும் கிடையாது” என்று பதிலளித்தார்.

அந்தமானில் காங்கிரஸ் வெற்றிபெற்றதற்கு திமுகதான் காரணம் என ஸ்டாலின் பேசியுள்ளாரே, “ வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகளும் காரணம். காங்கிரஸ், திமுக மற்றும் பிற கட்சிகள் ஒன்றுசேரவில்லை என்றால் தமிழகத்தில் அத்தனை இடங்களில் வெற்றிபெற்றிருக்க முடியாது. வெற்றிக்கு அனைவரும்தான் காரணம். எங்கள் கூட்டணி சரியான பாதையை நோக்கித்தான் செல்லும்” என்று கருத்து தெரிவித்தார்.

சோனியா காந்தி தன்னுடைய அறிக்கை குறித்து எதுவும் கேட்கவில்லை எனத் தெரிவித்த கே.எஸ்.அழகிரி, “அறிக்கை விடுவதற்கு மேலிடத்தில் யாருடைய அனுமதியையும் பெறத் தேவையில்லை. ஏனெனில் நானே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்தான். திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும்” என்று கூறினார்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon