மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் எதிர்க்கட்சிகள்: எடப்பாடி

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் எதிர்க்கட்சிகள்: எடப்பாடி

என்.ஆர்.சி, என்.பி.ஆர் குறித்து எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் வெற்றிபெற்றவர்களின் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் இன்று (ஜனவரி 14) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம், தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “இதுதொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அழகாக பதில் சொல்லிவிட்டார். அதுதான் எங்களுடைய கருத்து. தமிழக எல்லைகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. இதனை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். இதனை ஒடுக்கி தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை. அதிமுக சார்பில் போட்டியிட்டவர்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். அப்படியென்றால் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்றுதானே அர்த்தம். தேர்தல் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட்டனர். ஸ்டாலினும் அவரது கட்சியினரும் வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றம்சாட்டுகின்றனர்” என்று குறிப்பிட்ட முதல்வர், என்.பி.ஆர், என்.ஆர்.சி இரண்டும் வெவ்வேறானது என்றும் விளக்கினார்.

மேலும், “என்.பி.ஆர், என்.ஆர்.சி விவகாரத்தில் தமிழக மண்ணில் பிறந்த எந்தவொரு சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்படமாட்டார்கள். இதனை பிரதமரும் தெளிவுபடுத்திவிட்டார். ஆனால், அரசியல் லாபத்துக்காக சில எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இது தேவையற்ற பதற்றத்தை உண்டாக்குவதாகவே நான் கருதுகிறேன். இதுதொடர்பாக சட்டமன்றத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளோம். அவதூறான செய்திகளை சிறுபான்மையின மக்கள் நம்ப வேண்டாம்” என்று விளக்கம் அளித்தார்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon