மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

தேர்தல் ஆணையத்தில் திமுக மனு!

 தேர்தல் ஆணையத்தில் திமுக மனு!

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்லுக்காக நடந்த 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா குறித்த வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் புதிய வழக்குத் தொடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக மறுபடியும் கோரிக்கை வைத்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் 2017 ஏப்ரல் மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அதிகளவில் வழங்குவதாக புகார்கள் எழுந்தன.

அந்த சமயத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த வருமான வரித் துறை சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா தொடர்பாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்களின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கையை அடிப்படையாக வைத்து தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். அப்போது ஆர்.கே.நகர் தொகுதி அகில இந்திய அளவில் பேசப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்த திமுக, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதே விவகாரத்தில் தேர்தல் அதிகாரி யாருடைய பெயரும் குறிப்பிடாமல் கொடுத்த புகார் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் புதிய வழக்குத் தொடர வேண்டும் என்று திமுக பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால் இன்று (ஜனவரி 13) டெல்லியில் அகில இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா , தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகியோரை சந்தித்து திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.

அதில், “ ஆர்.கே.நகர் விவகாரம் தொடர்பாக புதிய கிரிமினல் வழக்கை தேர்தல் ஆணையம் தொடர வேண்டும் என்று கடந்த வருடம் செப்டம்பர் 26, நவம்பர் 6 ஆகிய நாட்களில் அகில இந்திய தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து இருமுறை திமுக மனு அளித்தது. அது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு வழக்குத் தொடருமாறு அறிவுறுத்தியும் தமிழக தேர்தல் அதிகாரி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்திய தேர்தல் ஆணையமே இதில் தலையிட்டு நேரடியாக புகார் ஒன்றை அளிக்க வேண்டும்.மேலும் ரத்து செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் சரியாக செயல்படாத தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon