மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின் அளிக்கும் விருந்து!

உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின் அளிக்கும் விருந்து!

தமிழகத்தில் நேற்று (ஜனவரி 11) நடந்து முடிந்த கவுன்சிலர்களுக்கான மறைமுகத் தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் அதிமுக 13 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. ஒன்றியத் தலைவர் பதவியிடங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெற்ற 289 ஒன்றியங்களில் அதிமுக 140 இடங்களிலும், திமுக 125 இடங்களிலும் பாமக 7 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வரும்போது அந்தமான் பயணத்தில் இருந்த ஸ்டாலின், தகவல்களைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சில திமுக சீனியர்கள்,

“உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘உள்ளாட்சித் தேர்தலை இந்த எடப்பாடி அரசு நடத்தும்போது 40% வெற்றி நமக்கு கிடைத்தாலே அது நமக்கு பெரிய வெற்றியாக இருக்கும். ஏனென்றால், மக்கள் பெருவாரியாக நம்மையே ஆதரித்தாலும் எடப்பாடி அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பல இடங்களில் நம் வெற்றியைத் தட்டிப் பறிக்கும். அதெல்லாம் போக நமக்கு 40% வெற்றி கிடைத்தது என்றாலே நாம்தான் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றோம் என்று அர்த்தம். அதனாள் தளராமல் போராடுங்கள்’ என்று கூறியிருந்தார் ஸ்டாலின்.

நிர்வாகிகளை போராடச் சொல்லிவிட்டு அவர் போய்விடவில்லை. ஸ்டாலினும் சளைக்காமல் களத்தில் இறங்கினார். உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக வெற்றிபெற்ற பல இடங்களில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழகம் முழுதும் திமுக வழக்கறிஞர் அணி யிடம் இருந்து வந்த தகவல்களை அடுத்து அன்று மட்டுமே இருமுறை மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றார். இரண்டாவது முறையாக இரவு 11 மணிக்கு மேல் தேர்தல் ஆணையரை சந்தித்த ஸ்டாலின், அவரிடம் உறுதியான தொனியில் சில விஷயங்களை பேசியிருக்கிறார். ‘மிஸ்டர் பழனிசாமி, இப்படியே காலம் இருந்துடும்னு நினைக்காதீங்க. எல்லாம் மாறும்’ என்று ஸ்டாலின் கோபத்தை மிக நாசூக்காக வெளிக்காட்டியிருக்கிறார். ஸ்டாலினின் இந்த அணுகுமுறைக்குப் பிறகுதான் திமுக ஜெயித்த இடங்களில் முழுதும் அதிமுகவுக்கு போகாமல் ஓரளவுக்காவது திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் இருந்து வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவு அறிவிப்பு, மறைமுகத் தேர்தல் என்று ஒவ்வொரு கட்டத்திலும் திமுக வழக்கறிஞர் அணியினரின் உழைப்பை அதிகம் பாராட்டியிருக்கிறார் ஸ்டாலின். வழக்கறிஞர் அணியினர் ஓயாமல் நடத்திய சட்டப் போராட்டங்களால்தான் இவ்வளவு இடங்களில் திமுக வெற்றிபெற்றது என்பது ஸ்டாலினின் நம்பிக்கை. அதனால் உள்ளாட்சித் தேர்தலில் உழைத்த வழக்கறிஞர் அணியினரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் விருந்து நடத்தி பரிசும் வழங்க இருக்கிறார் ஸ்டாலின்.

மொத்தத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக இந்த அளவுக்கு ஸ்கோர் செய்ததில் ஸடாலினுக்கு பெரிய மகிழ்ச்சிதான்” என்கிறார்கள்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon