~டிஎஸ்பிக்கு வெட்டு: மறைமுகத் தேர்தல் பரபரப்பு!

politics

27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட 5 பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் 27 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 11) காலை 11 மணிக்கு துவங்கியது. சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட, ரகசிய இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த கவுன்சிலர்கள் இன்று காலை மறைமுகத் தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு அழைத்துவரப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திமுக கவுன்சிலர்கள் காலை 9.30 மணிக்கும், அதனைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் 10.45 மணிக்கும் வருகை தந்தனர். வழக்கமாக அதிமுக உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் நடைபெறும் நாளில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுச் செல்வார்கள். ஆனால், பண்ருட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகிலேயே எம்.ஜி.ஆர் சிலை இருந்தும் அதனை அதிமுகவினர் யாரும் கவனிக்கவில்லை. திமுகதான் இங்கு அதிக அளவில் வெற்றிபெற்றிருப்பதால், திமுகவுக்கு ஒன்றிய பெருந்தலைவர் பதவி உறுதியானது.

எனினும், அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒன்றிய அலுவலகத்தின் வளாகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் விவாதித்தனர். அதில், தோல்வியடைவோம் என்று தெரிந்தே தலைவர் பதவிக்கு நிற்க நாங்கள் தயாரில்லை என்று ஒவ்வொருவராக ஒதுங்கிவிட்டனர். இதனையடுத்து, இறுதியாக தேவநாதன் என்பவரை நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டு தேர்தல் அலுவலரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதனால் 11 மணிக்கு நடைபெற வேண்டிய வாக்குப் பதிவு தாமதமானது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும், அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டினர்.

வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் திமுக வேட்பாளர் பாலமுருகனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், அதிமுக தரப்பிலிருந்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேவநாதன் மட்டுமே வாக்களித்துள்ளார். மற்ற கவுன்சிலர்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் வெற்றி நிலவரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த பொ.சந்திரசேகரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ப்ரீத்தா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் கண்ணதாசனும், கோவை மாவட்ட ஊராட்சித் தலைவராக சாந்திமதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவின் பி.உஷா தேர்ந்தெடுப்பட்டார். திருவாரூரில் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவின் கோ.பாலசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூரிலுள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது. நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக பொன்தோஸ் தேர்வு செய்யப்பட்டார். நீலகிரியில் தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராவது இதுவே முதல் முறை.

**தேர்தல் ரத்து**

சேலம் மாவட்டம் தாராமங்கலம் ஒன்றியத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது. சட்டம் -ஒழுங்கு காரணமாக தேர்தலை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். இதுபோலவே நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், திருவள்ளூரிலுள்ள ஆர்.கே.பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவலங்காடு ஆகிய ஒன்றியங்களில் மறைமுகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடலூர் நல்லூர் ஒன்றியத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அங்கு தேர்தல் தள்ளிவைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நல்லூரில் ஒன்றியத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வெளியான தகவலால், தேர்தலை நிறுத்துவதற்காக ஆளுங்கட்சியினரே திட்டமிட்டு இதுபோன்ற நாடத்தை நடத்தியுள்ளனர் என்று அங்குள்ள திமுகவினர் விமர்சிக்கிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி வெங்கடேசன் தடுக்க முயன்றபோது, அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும், ஒன்றிய அலுவலகத்தின் மீது அவர்கள் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடினர். அங்கு பதற்றமான சூழல் நிலவிவருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் சம அளவிலான இடங்களைப் பிடித்துள்ளதால் குலுக்கல் முறையில் ஒன்றியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அங்கு போராட்டம் நடத்திவருகின்றனர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *