மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

குடியுரிமை சட்டத்தை ஆதரிக்க அதிமுகவுக்கு வந்த அழுத்தம்! எஸ்.ஆர்.பி. பேட்டி

குடியுரிமை சட்டத்தை ஆதரிக்க அதிமுகவுக்கு வந்த அழுத்தம்! எஸ்.ஆர்.பி. பேட்டி

குடியுரிமை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற அதிமுகவின் 11 உறுப்பினர்களுடைய ஆதரவு மிகவும் அவசியமாக இருந்தது. ராஜ்யசபாவில் அதிமுக இந்த மசோதாவை எதிர்த்திருந்தால் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேறியிருக்காது. இதனால் அதிமுக மீது தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவை ஆதரித்ததன் பின்னால் மத்திய அரசின் அழுத்தம் இருந்ததாக அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். ஆங்கில நாளிதழ் தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி எஸ்.ஆர்.பி. மனம் திறந்திருக்கிறார்.

“பாஜக கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். . ஆனால் மசோதாவின் குறைபாடுகளை நான் அவையில் பேசும்போது சுட்டிக்காட்டியுள்ளேன். ‘முஸ்லிம்கள்’ என்ற சொல் அந்த மசோதாவில் இல்லாதது தவறுதான்” என்ற எஸ்.ஆர்.பி, இந்த மசோதாவை ஆதரிக்க அதிமுகவுக்கு பாஜக நேரடியாக அழுத்தம் கொடுத்ததா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

“பாஜக நேரடியாக எதையும் செய்யமாட்டார்கள். கட்சி அலுவலகத்தில் நாங்கள் இந்த விவகாரம் பற்றி விவாதித்தபோது, தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த துணைச் செயலாளர் என்னிடம் தொலைபேசியில் பேசி, குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் எனது கருத்துக்களை வெளிப்படுத்துவேன் என்று தெளிவுபடுத்தினேன். உங்கள் கருத்தை பதிவு செய்ய நிச்சயமாக உரிமை உண்டு என்று அவர் கூறினார்” என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்.

மேலும் அவர், “பாஜகவின் நோக்கம் ஒரு இந்து ராஷ்டிராவை (இந்து தேசத்தை) உருவாக்குவதாகும். ஆனால் அது இந்த வார்த்தையை வெளிப்படையாகப் பயன்படுத்தாமல் பல்வேறு வார்த்தைகளின் மூலமாக சொல்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பாஜக தலைவர்கள், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தை வழிநடத்தும் திரு. அமித் ஷா, தனது நிலைப்பாட்டை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்” என்று கூறியுள்ளார்.

“இந்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை பற்றி பேசப்படவில்லையே?” என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள எஸ்.ஆர்.பி, “ நான் இந்த விவாதத்தில் ஐந்து நிமிடங்கள் பேசினேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, இலங்கைத் தமிழர்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பலர் வெளியேறிவிட்டனர், சிலர் [இலங்கைக்கு] திரும்புவதற்கு சூழ்நிலைகள் உகந்ததல்ல என்பதால் சிலர் இங்கு தொடர்ந்து வாழ்கின்றனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரினேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் முஸ்லிம் மக்களிடமிருந்து அதிமுக அந்நியப்படுகிறதா என்ற கேள்விக்கு,

“இந்த மசோதா அதிமுகவை கடுமையாக பாதிக்காது. ஆனால் நிச்சயமாக சில தாக்கங்கள் இருக்கும். நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எனது நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும். நான் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அமைதியாக இருக்க வேண்டியதில்லை. எனது சுருக்கமான உரையில் கூட நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினேன். இந்த விடயங்களை தீர்மானிக்கும் முன் கட்சியின் ஆர்வத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்.

அதிமுக எம்.பி. ஒருவர் இப்படி வெளிப்படையாக பேட்டி கொடுத்தது அதிமுக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 16 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon