20,000 வேலைவாய்ப்புகள்: தைவான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

Published On:

| By admin

0,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தைவானின் புகழ்பெற்ற காலணி வடிவமைப்பு, உற்பத்தி நிறுவனத்துடன் முதல்வர் தலைமையில் நேற்று ஒப்பந்தம் போடப்பட்டது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் 130 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. துபாய் பயணத்தின் வாயிலாக ரூ.6,100 கோடி முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முதல்வர் தலைமையில் தைவானின் புகழ்பெற்ற காலணி உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங்ஃபூ நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஒய்.சாங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் காலணி உற்பத்திக்கான தொழிற்சாலையை அமைக்க ரூ.1,000 கோடி அளவுக்கு ஹாங்ஃபூ நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தொழிற்சாலை தொடங்கும் பணி நடைபெறும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஹாங்ஃபூ நிறுவனம் தைவான், சீனா, வியட்நாம் நாடுகளிலும் தொழிற்சாலைகளை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share