hபார் டெண்டர்: செந்தில்பாலாஜி விளக்கம்!

Published On:

| By Balaji

தன் வீட்டின் முன்னால் டாஸ்மாக் மதுபான பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியதற்கு அரசியல் உள் நோக்கமே காரணம் என்று மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்று (ஜனவரி 3) காலை சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டு முன் மதுபான பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். கடந்த வாரம் டிசம்பர் 30,31 தேதிகளில் மதுபான பார் டெண்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று அவர்கள் புகார்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் போராட்டம் நடத்தியவர்கள் சார்பில் ஐந்து பேரை தன் வீட்டுக்குள் அழைத்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின் அவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இந்த நிலையில் இன்று(ஜனவரி 3) பகல் 12.30 மணியளவில் சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

“டாஸ்மாக் பார் டெண்டரில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. எல்லாமே வெளிப்படையான முறையில்தான் நடந்திருக்கின்றன.

2019 ஆம் ஆண்டு என்னென்ன விதிமுறைகள் வைக்கப்பட்டதோ அதே 66 விதிமுறைகள்தான் இப்போதும் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இரு நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், பார்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கூடுதல் நிபந்தனைகள்.

கடந்த ஆட்சியில் சுமார் 5 ஆயிரம் கடைகளுக்கு 6000 விண்ணப்பங்கள்தான் வாங்கப்பட்டன. ஆனால் இப்போது சுமார் 3 ஆயிரம் கடைகளுக்குத்தான் டெண்டர் கேட்டிருந்தோம். அதற்காக 11 ஆயிரத்து 215 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இதில் இருந்தே எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறோம் என்பது தெரிகிறது.

என் வீட்டு முன்னால் ஆர்பாட்டம் நடத்தியவர்களில் ஐந்து பேரை அழைத்துப் பேசினேன். உங்கள் டெண்டர் படிவம் ஏற்கப்பட்டதா என்று கேட்டேன். ஏற்கப்பட்டது என்றார்கள். ‘டெண்டரில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் என்னிடம் புகார் கொடுத்தீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார்கள். கடந்த ஏழு மாதங்களாக என்னை சந்தித்தீர்களா என்று கேட்டேன் இல்லை என்று சொன்னார்கள். டெண்டர் முடிந்து இரு நாள் அரசு விடுமுறை. இன்றுதான் அடுத்த வேலை நாள். இந்த இரு நாட்களுக்குள் என்ன முறைகேடு நடந்திருக்க முடியும்? இப்போதுதான் பரிசீலனை நடந்துகொண்டிருக்கிறது. அதற்குள் எப்படி முறைகேடுகள் நடத்த முடியும் என்று கேட்டேன். உங்களுடைய கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். எழுதிக் கொடுக்கிறோம் என்று கூறிச் சென்றிருக்கிறாரக்ள்.

டெண்டர் நடந்த அன்று எந்த மாவட்டத்திலாவது என் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்று சொன்னார்களா? ஒவ்வொரு மாவட்டத்திலும் உங்கள் நிருபர்கள் இருக்கிறார்களே கேட்டுப் பாருங்கள்.

டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள 66 நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். என் வீட்டு முன் நின்று அரசியல் உள் நோக்கத்தோடு வந்து எனக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று வந்தவர்களிடம் தெளிவாகக் கேட்டு அனுப்பினேன். டெண்டர் வெளிப்படைத் தன்மையோடுதான் நடக்கிறது. கிடைக்கக் கூடியவர்கள் சந்தோஷப்படுவார்கள். கிடைக்காதவர்கள் வருத்தப்படுவார்கள். இந்தக் கட்சி அந்தக் கட்சினு பார்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை”என்று விளக்கம் அளித்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share