தமிழகத் தேர்தல்: முன்கூட்டியே துணை ராணுவப் படையினர் எதற்காக?

Published On:

| By Balaji

தமிழகத் தேர்தலுக்கு ஒரு லட்சம் போலீஸாரும் 45 கம்பெனி துணை ராணுவப் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 25ஆம் தேதி 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருகின்றனர். ஏப்ரல் மாதம் எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்கு முன்கூட்டியே இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்காக என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் நின்று வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி 54 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயரதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிகள் முடிந்ததும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று ஏற்கனவே அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ரவுடிகள், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் உள்ளனர். இவர்கள் அனைவருமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிகிறது. இதற்கிடையில் வருகிற 25ஆம் தேதி 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருகின்றனர்.

வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கேற்ப துணை ராணுவப்படை கோரப்படும். மாநில அரசின் வேண்டுகோளின் அடிப்படையில் துணை ராணுவப் படை அனுப்பி வைக்கப்படும். ஆனால், இந்த முறை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே துணை ராணுவப்படைகள் வருகின்றன.

கடந்த தேர்தல்களில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் பெருமளவு நடந்தன. நாடு முழுவதும் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தலில் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்துவதற்காக முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுகிறது.

சென்னைக்கு வர இருக்கும் துணை ராணுவப் படையினரில் சென்னையில் மட்டும் 12 கம்பெனி படையினர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அதாவது ஒவ்வொரு துணை ஆணையரின் கீழும் மூன்று கம்பெனி வீதம் நான்கு மண்டலங்களுக்கும் இந்த 12 கம்பெனி படையினரும் அனுப்பி வைக்கப்படுவார்கள். மீதமுள்ள 33 கம்பெனி துணை ராணுவப்படையினரும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்படுவார்கள்.

தேவைக்கேற்ப மேலும் கூடுதலாக துணை ராணுவப் படையினர் அழைக்கப்பட உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share