தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

Published On:

| By Balaji

பாஸ்கர் செல்வராஜ்

பொதுவாக இந்திய அரசியல் பொருளாதாரச் சூழலை, மாற்றங்களை இந்தியச் சூழலை முதன்மையாகக் கொண்டு மதிப்பிடுவதும் புரிந்துகொள்வதும் வழமை. இது மாற்றங்களின் பிரச்சினையின் ஒரு பகுதியைத்தான் நமக்குக் காட்டுகிறது. மறு பகுதியான உலக மாற்றங்களையும் அது இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இணைத்துப் புரிந்துகொள்வது குறைவாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பும் சரி, அதன் பின்பும் சரி இந்தியா சுயமான வளர்ச்சியை, மாற்றங்களைக் கண்டது எனக் கூறிவிட முடியாது. குறிப்பாக உலகமயத்துக்குப் பிறகான இந்தியாவின் வளர்ச்சி மாற்றங்களை உலக மாற்றங்களோடு இணைத்து பார்ப்பதன் மூலமே இந்த மாற்றங்களின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்தக் கருதுகோளின் அடிப்படையில் **தமிழகத்தின் தொண்ணூறுகளுக்குப் பிறகான வளர்ச்சியையும் தற்போது அது இந்திய ஒன்றியத்துடன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உலக – இந்தியப் பொருளாதார அரசியல் மாற்றங்களின் வரிசையில் வைத்து புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சி இது**. இந்தப் புரிதலின் அடிப்படையில் ஒன்றியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி பெறவும் எதிர்காலத்துக்கான தெளிவான பாதையைச் சமைத்துக் கொள்ளவும் காணும் கனவிது.

**பகுதி 1: தமிழகம் சந்தித்த முரண்களும் வளர்ந்து வந்த பாதையும்!**

தற்போதைய தமிழக அரசியல் சூழல் இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழகம் எதிர்கொண்ட சூழலை ஒத்ததாக இருக்கிறது. அப்போது ஒன்றியத்தில் அமர்ந்த பார்ப்பனியம் இங்கிருந்த பார்ப்பனிய சக்திகளைக் கொண்டு ஆதிக்கம் செய்ததைப் போலவே இப்போதும் செய்கிறது. அதற்கான எதிர்ப்பின் முகமாக அப்போது இருந்ததைப் போலவே இப்போதும் திராவிட கருத்தியல் திகழ்கிறது. அந்த ஆதிக்கத்தை எதிர்கொள்ள அப்போது எடுத்த அரசியல் நிலைப்பாடான மாநில சுயாட்சி, அதற்கான அடிப்படையாக விளங்கும் பொருளாதார வளர்ச்சி, அந்த வளர்ச்சியை எட்ட திறன்வாய்ந்த தொழிலாளர்கள், அவர்களை உருவாக்க அடிப்படையான சமூக வளர்ச்சி திட்டங்கள் என இப்போதும் திமுக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல; அதனை வலுப்படுத்தி உடன் நின்று செயல்படுத்தி வெற்றி காண வைக்க வேண்டியது அனைவரின் கடமையும்கூட.

**மீண்டும் முற்றிய ஒன்றிய – தமிழக முரண்**

அடிப்படையில் அன்றைய பார்ப்பனிய ஆதிக்கம், அதற்கு எதிரான எதிர்ப்பு என்ற இந்த ஒன்றிய – தமிழக முரண் இன்றைய சூழலை ஒத்ததாக இருந்தாலும் அன்றிருந்த களத்தில் இருந்து **இன்றைய களம் பெரிதும் மாறி இருக்கிறது. ஆகவே, அதற்கேற்றவாறு நமது செயல்திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒன்றிய ஆதிக்கத்துக்கு எதிரான சுயாட்சியை அடைய அடிப்படையான பொருளாதார முன்னேற்றத்தையும் அதை அடைய தேவையான உற்பத்தி பெருக்கத்துக்கான வழிவகைகள் குறித்தும் அதன் பலன்களை அனைவருக்கும் பரவலாக்குவது குறித்தும் எல்லா தளங்களிலும் நாம் விவாதிக்க வேண்டி இருக்கிறது.**

**உற்பத்தியைப் பெருக்கும் வழி**

பொருளாதார உற்பத்தி பெருக்கம் இருவகைகளில் நிகழ்ந்திருக்கிறது.

1. தொழிலாளர்களின் உழைக்கும் நேரத்தையோ, உழைக்கும் நபர்களின் எண்ணிக்கையையோ அதிகரிப்பதன் மூலம்.

2. உற்பத்தி செய்யும் முறையை மேம்படுத்துவதன் மூலமும் அதில் ஈடுபடும் நபர்களின் திறனை அதிகரிப்பதன் மூலமும்.

முதல்வகை குறைவான உற்பத்தித்திறன் கொண்டது. இது பெண்களைப் பிள்ளைகளை பெற்றுத்தள்ளும் இயந்திரமாகவும், மனிதர்களை இயந்திரங்களாக பாவித்து கசக்கி பிழியும் தன்மையும் கொண்ட பிற்போக்கான கொடூர முறை.

தமிழகத்தில் முதல்வகை உற்பத்தி முறை நிலவிய எண்பதுகள் வரை பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளியதும் பண்ணையடிமை முறை நிலவியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடூரத்தைக் குறைத்து உற்பத்தியை பன்மடங்கு பெருக்கும் மேம்பட்ட தன்மை கொண்டது இரண்டாவது முறை. ஆனால் இரண்டுக்குமே அடிப்படை, உழைக்கும் மனிதர்களான நாமும் நம்முடைய மேம்பட்ட திறனும்.

**முரண்பாடு, போராட்டம், மாற்றம்**

இப்படி நிலவும் உற்பத்தி முறைக்கு ஏற்ற வகையிலேயே நமது வாழ்க்கை, கல்வி, அரசு, சமூகம், ஊர், நகரம் ஆகியவை இருக்கும். அன்றைய தமிழக சூழலை தற்போதைய சூழலுடன் ஒப்பிட்டு பார்த்து மாறுபட்ட உற்பத்தி முறை ஏற்படுத்திய மாற்றத்தைப் புரிந்துகொள்ளலாம். நிலவும் உற்பத்தி முறையில் பலனடைபவர்கள்… உதாரணமாக பண்ணையார்கள் அதில் எந்த மாற்றமும் வருவதை விரும்புவதில்லை. அது அவர்கள் அனுபவிக்கும் மேன்மைகளுக்கு எதிரானது. ஆனால், அந்த முறையில் பாதிக்கப்படுபவர்கள் அதை மாற்ற துடிப்பார்கள். ஆள்பவர்களைக்கொண்டு இந்தத் துடிப்பை அடக்கி இருக்கும் அமைப்பைத் தொடர்வார்கள். ஆனால் அவர்களின் நிலத்தை, அதில் வரும் பலனை, ஆதிக்கத்தை இன்னொருவன் அபகரிக்க வந்தால் அதைத் தடுக்க எல்லோரும் இணைந்தால் மட்டுமே எதிர்த்து வெற்றிபெற முடியும். அப்போது இதுவரையிலும் எதிரும் புதிரும் நின்றவர்கள் ஓரணியில் நிற்க வேண்டி வருகிறது. இதுவரையிலும் அடக்கப்பட்டவர்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டி வருகிறது.

ஒன்றிய பார்ப்பனியவாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்த தமிழகத்தில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் அரசியல் கூர்மையடைகிறது. ஒன்றிய ஆதிக்கத்துக்கு எதிராக முதலில் தனித்தமிழ்நாடு பிரகடனமாகவும் பின்பு படைபலம் கொண்ட ஒன்றியத்தை எதிர்த்து நிற்கும் சாத்தியமற்ற நிலையில் சுயாட்சி கோரிக்கையாகவும் மாற்றமடைகிறது. இதற்கான ஒன்றிணைந்த போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. மாநில சுயாட்சிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான தீர்வு என்பது ஒன்றுதான். அது உற்பத்தி முறைகளை மேம்படுத்துவதும் உற்பத்தியைப் பெருக்குவதும். **அதுதான் தமிழகத்தை சுயமாக சொந்த காலில் நிற்க வைத்து மக்களின் பசியைப் போக்க வல்லது.**

**மக்களின் திறனும் உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சியும்**

உற்பத்தியையும், உற்பத்தி முறையையும் பெருக்க ஒரே வழி மனிதர்களின் திறனைப் பெருக்குவதுதான். மனிதர்களின் திறனைப் பெருக்குவதற்கான ஒரே வழி அவர்களுக்கு கல்வியைக் கொடுப்பது. இப்படி மக்களுக்குக் கல்வி புகட்டி அவர்களின் திறனை மேம்படுத்தும்போது அது

1. நடப்பில் பயன்பாட்டில் உள்ள பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது.

2. புதிய பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்கான வழியை வாய்ப்பை விரிவாக்குகிறது.

இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் வழியான உற்பத்தி பெருக்கம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பொருட்களின் விலையைக் குறைத்து ஒரு சிலர் மட்டுமே நுகரும் நிலையை மாற்றி எல்லோருக்கும் பரவலாக்குகிறது. அதேபோல புதிய பொருட்களை உருவாக்கும்போது முதலில் அது அதிக விலைமதிப்பு கொண்டதாகவும் பின்பு அதன் தேவை அதிகரிக்கும்போது உற்பத்தியை மேலும் பெருக்க முற்படும்போது விலை குறைந்து எல்லோரும் நுகரக்கூடியதாக மாறுவதும் ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வு.

**விரைந்து முன்னேறும் வழி**

இந்தக் கண்டுபிடிப்புகளையும் உற்பத்தியைப் பெருக்கும் தொழில்நுட்பங்களையும் ஓரிரு நாளிலோ, ஓரிரு வருடத்திலோ நிகழ்த்திவிட முடியாது. அதேநேரம் நிகழ்த்த முடியாததும் அல்ல. பல பத்து ஆண்டுகள் முயன்றால் முடியக்கூடியதுதான் என்றாலும் ஏற்கனவே இதனை கண்டறிந்தவர்களின் துணைகொண்டு முதலில் இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் உள்ள இடைவெளியை இட்டு நிரப்புவதும் பின் அதனை மேம்படுத்தி வளர்தெடுப்பதுமே ஒரு சமூகத்தை வேகமாக முன்னேற்றி செல்ல சாத்தியமான வழி. சீனாவின் வளர்ச்சியும் எழுச்சியும் அதற்கு சான்றாக நிற்கிறது.

**விவசாயத் தொழில்நுட்பங்களை, அதிக விளைச்சல் தரும் வீரிய விதைகளை இறக்குமதி செய்து உற்பத்தியைப் பெருக்கிய அதேவேளை இங்கே கல்விக்கூடங்களை, கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களை, விவசாய ஆய்வு நிறுவனங்களை நிறுவி குலக்கல்வி பேசி மக்களின் திறனை பெருக்க குறுக்கே நின்றவர்களை வெளியேற்றி கல்வியைப் பரவலாக்கி மக்களின் திறனைப் பெருக்கி தன்னிறைவு அடையும் நோக்கில் பகுத்தறிவுப் பார்வையுடன் தமிழகம் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டது.** திறன்மிக்க தொழிலாளர்களை தமிழகம் உருவாக்கி இருந்தாலும் தொண்ணூறுகள் வரையும் தொழில்நுட்ப, தொழிற்துறை பெருக்கமும், பரவலாக்கமும் மட்டுப்படுத்தப் பட்டதாகவே இருந்தது. காரணம், இந்தியத் தொழிற்துறையில் வட இந்திய ஆதிக்கசாதி வர்க்கம் கொண்டிருந்த முற்றுருமையும் அதில் நுழைவதற்கு இருந்த தடைகளும் என்பது யாவரும் அறிந்தது.

**தடுத்து நிறுத்தியது எது?**

கல்வியையும், அறிவியல் தொழில்நுட்பத்தையும் சிலருக்கானதாக சுருக்கும்போது புதிய கண்டுபிடிப்புகளுக்கும், உற்பத்தி பெருக்கத்துக்குமான கதவு இழுத்துச் சாத்தப்படுகிறது. அது உற்பத்தி பெருக்கத்துக்குப் பெரும் தடையாக மாறுகிறது. உற்பத்தி பெருகி பொருட்கள் எல்லோருக்கும் கிடைப்பதை தடுத்து ஒரு சிலர் மட்டுமே வாங்கி நுகருவதாகக் குறுக்குகிறது. **கணினி மற்றும் திறன்பேசி உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்ட வரை விலை அதிகமானதாகவும் சிலரால் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. அதன் உற்பத்தி தொழில்நுட்பம் சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பரவி வளர்ந்த பிறகு அதன் உற்பத்தி பெருகி விலை குறைந்து இன்று பலரும் பயன்படுத்தும் நிலையை எட்டி இருக்கிறது.**

**ஏகாதிபத்திய – பார்ப்பனிய முரண் **

சுதந்திரத்துக்குப் பிறகு எந்த உழைப்பும் இன்றி ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற பார்ப்பனிய கட்டமைப்பு வழங்கிய யாரும் உள்ளே வந்து போட்டியிட முடியாத தொழிற்துறை முற்றுருமையை இழக்க விரும்பாத பார்பனியவாதிகள் தொண்ணூறுகளில் முதலாளித்துவ உற்பத்தி மற்றும் சந்தை சார்ந்த உலக முற்றுருமையை நிலைநாட்ட வந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்து இணக்கமாகச் செல்ல முடியாமல் முரண்பட்டார்கள். இவர்களுக்கிடையிலான இந்த முரணும் அதில் பார்ப்பனியவாதிகள் கண்ட தோல்வியும் இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறையில் இருந்த தடைகளை உடைத்தன.

**பலனடைந்த தமிழகம்**

அதன் பிறகான தொழிற்துறை பரவலாக்கமும், நவீன தொழில்நுட்ப இறக்குமதியும், தயார் நிலையில் இருந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களும் தமிழகத்துக்குப் பொருளாதார உற்பத்தியைப் பெருக்கும் சாத்தியத்தை வழங்கின. உலகமயம் வழங்கிய சந்தை வாய்ப்பை தமிழகம் பயன்படுத்திக் கொண்டது. அதற்கான அனைத்து அடிப்படைகளையும் தமது சிறப்பான நிர்வாகத் திறன் கொண்ட மனிதவளம், மேம்பட்ட சிந்தனைப் போக்கு ஆகியவற்றைக்கொண்டு மிக வேகமாக உருவாக்கி மேம்படுத்திக் கொண்டது. அன்றைய வாகன உற்பத்தி போன்ற தொழில்துறை தேவைக்கு தமிழகமெங்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் முளைத்தன. மருந்துப் பொருட்கள் போன்ற உற்பத்தித் துறைக்கு அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன. பின்பு மென்பொருள் சேவைத்துறை போன்றவற்றுக்குத் தேவையான பொறியியலாளர்களை உருவாக்க புற்றீசலைப் போல பொறியியல் கல்லூரிகள் உருவாகின. இவற்றின் உற்பத்திக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புக்கு சென்னையில் டைடல் பூங்கா, பல பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட தொழிற்பேட்டைகள், சாலைகள், மின்சார வசதி என அதன் பட்டியல் நெடியது.

உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய இன்றியமையாத அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி ஒருபுறம் திறன்மிக்க தொழிலாளர்களையும் மறுபுறம் உற்பத்திக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் வேகமாக உருவாக்கிய தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டது. அதிக லாபம் தரும் திறன்மிக்க தொழிலாளர்கள் பங்குபற்றி பலனடையும் துறைகளை மட்டும் வளர்த்தெடுக்காமல் திறன்குறைந்த தொழிலாளர்கள் பங்கேற்கும் குறைந்த லாபம் தரும் தோல்பொருட்கள், ஆடை உற்பத்தி போன்ற துறைகளையும் உருவாக்கியதன் மூலம் இந்த வளர்ச்சியில் எல்லோரும் பலனடைய வழிவகை செய்தது.

** ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில் **

**பாஸ்கர் செல்வராஜ்**

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு naturebas84@gmail.com

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share