உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வை தமிழகம் முழுதும் நடத்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், சென்னையில் நேற்று (பிப்ரவரி 28) கொட்டிவாக்கம் – ஓ.எம்.ஆர். சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற, சென்னை மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின் பிறகு உரையாற்றினார்.
அப்போது, “சென்னை மாநகரத்தின் மேயராக நான் ஒரு முறையல்ல, இரண்டு முறை இருந்தவன். அமைச்சர் பொறுப்பும் துணை முதலமைச்சர் பொறுப்பும் அதன்பிறகு வந்தவை, முதலில் கிடைத்த பொறுப்பு சென்னை மாநகர மேயர்தான்.
சென்னை மாநகராட்சியின் மேயராக 44வது வயதில் நான் வந்தேன். ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பிற்காலத்தில் என்னை பாராட்டினார் தலைவர் கலைஞர். அப்படி உழைக்க எனக்கு கற்றுக் கொடுத்தது சென்னையின் மழை தான். முதன்முதலாக நான் மேயரானபோது தொடர்ந்து சென்னையில் அடைமழை பெய்தது. முறையான வடிகால் வசதிகள் இல்லாத நிலையில் தண்ணீரில் மிதந்தது தலைநகர். தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களுக்கு தினமும் சென்று விடுவேன். உடனடியாகச் செய்யவேண்டிய காரியங்களை அதிகாரிகள் மூலமாக முடுக்கி விட்டேன். பின்னர், தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வடிகால்களை அமைத்தோம்.
நான் மேயராக பதவி ஏற்பதற்கு முன்புவரை சுமார் 663 கிலோ மீட்டர் நீளத்துக்கு வடிகால்வாய்கள் இருந்தது. எனது காலத்தில் சுமார் 135 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிதாக வடிகால்களை அமைத்தோம். சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒன்பது பாலங்களைக் கட்டியது எனது சாதனை. குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக பாலத்தைக் கட்டி முடித்தது மட்டுமல்ல, அதற்கு குறிப்பிட்டு ஒதுக்கப்பட்ட தொகைக்கும் குறைவாக கட்டிக் கொடுத்துக் காட்டியவன் நான்.
மாநகராட்சி பள்ளிக்கூடங்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தினோம். சேர்க்கை விகிதம், வெற்றி விகிதம் அனைத்தும் உயர்ந்தது. மாநகராட்சி பள்ளிகள் கணினி வசதி கொண்டதாக மாறியது. சென்னை சிங்காரச் சென்னையாக மாறுவதற்கான அடித்தளப் பணிகள் அனைத்தையும் செய்து கொடுத்தோம்”என்று சுட்டிக் காட்டினார்.
மேலும், “ அண்ணா சாலை அண்ணா மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், செம்மொழிப் பூங்கா, டைடல் பார்க், தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு இன்று பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், மெட்ரோ ரயில் கோயம்பேடு காய்கறி அங்காடி, கோயம்பேடு பேருந்து நிலையம், நாமக்கல் கவிஞர் மாளிகை, அண்ணா நூற்றாண்டு நூலகம், ஓ.எம்.ஆர் சாலை ஐ.டி. காரிடார் இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் சென்னையின் தேவையை தீர்த்து வைத்தவர்கள் நாம்!
சில மண்டலங்களுக்கு மட்டும் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு விட்டுள்ளார்கள். அந்தப் பணிக்காக குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே டெண்டர் விட்டதை போல காட்டி விதிமுறைகளை திருத்தி இருக்கிறார்கள். குப்பைக்கு வரி போட்ட குப்பை அரசுதான் இது. நான் கண்டித்த பிறகு தான் அதை ரத்து செய்தார்கள்.
ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று பழனிசாமி பேசி இருக்கிறார். அதிமுகவை வீழ்த்துவதற்கு, இந்த ஸ்டாலின் எந்த அவதாரத்தையும் எடுக்கத் தேவையில்லை. ஸ்டாலின், ஸ்டாலினாகவே இருந்தாலே அதிமுக வீழ்ந்துவிடும். அதிமுகவை கரையானைப் போல பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அரித்து பலவீனம் ஆக்கிவிட்டார்கள். எனவே இதனை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் தேவையில்லை.
சசிகலா சிறையை விட்டு வெளியில் வந்துவிட்டார் என்றதும் பயந்து போய் அதிமுக தலைமைக் கழகத்தை பூட்டியவர் பழனிசாமி. ஜெயலலிதாவின் நினைவிடத்தை பூட்டியவர் பழனிசாமி. ஜெயலலிதா பிறந்த அன்று கூட அதனை பழனிசாமியால் திறக்க முடியவில்லை. அந்தளவுக்கு பயம் பீடித்துக் கிடக்கும் பழனிசாமி விரைவில் வீழ்வார். மக்கள் அதைச் செய்வார்கள்.
“ஸ்டாலின் ஆட்சியில் இல்லை, அவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்” என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அப்படியானால் நான் சொல்வது அனைத்தையும் எதற்காக பழனிசாமி அறிவித்துக் கொண்டு இருக்கிறார்?
பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய அரசுப் பணிகளில் பெற வேண்டிய அனைத்து உரிமைகளையும் மத்திய பாஜக அரசு பறித்துவிட்டது. அதற்கு எதிராக ஒரே ஒரு அறிக்கை கூட விடாதவர் தான் இந்த பழனிசாமி. மத்திய அரசுப் பணி என்பதே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்த சதியை தடுக்க முடியாதவர் பழனிசாமி. ஆனால் இன்றைக்கு தேர்தல் நேரத்தில் சமூகநீதி நாடகத்தை பழனிசாமி போட்டு வருகிறார். விவசாயி என்று போட்ட வேஷம் தேர்தலுக்காக! சமூகநீதி என்று போடும் வேஷமும் தேர்தலுக்காக என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். ஆட்சி முடியும் போது அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது. கழக அரசு அமைந்ததும், அனைவருக்குமான சமூகநீதியை நிச்சயம் வழங்கும்”என்று பேசினார் ஸ்டாலின்.
**-வேந்தன்**
�,”