உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளுக்கான முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. ஒன்றிய வார்டு குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதுபோலவே ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37, 830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனையடுத்து, வாக்காளர்கள் அல்லாத வெளி நபர்கள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வெளியேறாதவர்கள் மீது நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சிகளில் 4 பதவிக்கு தேர்தல் நடப்பதால், ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் அளிக்க வேண்டும். இந்த வாக்குப்பதிவு வெப் கேமராக்கள், பறக்கும் படைகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
அதிமுகவிற்கு ஆதரவளிக்கக் கோரிக்கை விடுத்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், “ஜெயலலிதா ஆட்சியின் போது, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அமோக ஆதரவு அளித்த வாக்காளப் பெருமக்கள், அவரே இப்பொழுதும் நேரில் வந்து வாக்கு கேட்பதாக எண்ணி, அதிமுகவை ஆதரிக்க வேண்டுமாய் இருகரம் கூப்பி உங்கள் முன் நிற்கிறோம்.
மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சி நிர்வாகத்தில் ஈடுபடும்போது, மத்திய, மாநில அரசுகளின் முழுமையான ஒத்துழைப்பைப் பெறுவதோடு, மத்திய, மாநில அரசுகளோடு தோளோடு தோள் நின்று புதிது புதிதாக திட்டங்களையும், நிதி ஆதாரத்தையும் பெற்று வந்து, உங்கள் பகுதிகளின் வளர்ச்சியில் முழுமையாக அக்கறை காட்டுவார்கள். ஆகவே அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.�,