கட்சிக்குள் சமூகநீதி உண்டா? ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி!

Published On:

| By admin

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்று கடந்த குடியரசு தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன் படியே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், ஃபரூக் அப்துல்லா, சரத் பவார், டி. ராஜா, சீதாராம் யெச்சூரி , எச்.டி. தேவேகவுடா, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், மெஹ்பூபா முப்தி , உத்தவ் தாக்கரே, அரவிந்த் கேஜ்ரிவால், சந்திரசேகர ராவ், ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, அகிலேஷ் யாதவ் , மாயாவதி, . ஓ. பன்னீர்செல்வம், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் என 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நமது நாட்டின் 73ஆவது குடியரசு நாளை நாம் கொண்டாடிய வேளையில், கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைத்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தேன்.
இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்/நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகிறேன். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள் பொதிந்த சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்குப் பிற்போக்குச் சக்திகள் சவால் விடும் இந்த இடர்மிகு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோர்க்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். இம்முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்,
“ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் உட்கட்சி சமூகநீதி எந்த அளவுக்கு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்புகிறார் விடுதலை களம் கட்சியின் தலைவரான நாகராஜன்.

அவர் நம்மிடம் பேசும்போது,
“தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி’19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (04.02.2022) முடிவடைந்த நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 
இதுவரை வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்ற கட்சிகளை விட அதிக இடங்களை கம்பளத்தார் எனப்படும் தொட்டிய நாயக்கர் சமூகத்துக்கு வழங்கியுள்ளது. ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் வழக்கம்போல் மாவட்டச் செயலாளர்களான குறுநில மன்னர்களின் கையே ஓங்கியுள்ளது. அவர்கள் எந்தவிதக்கட்டுப்பாடுமின்றி தங்கள் இஷ்டம் போல் செயல்பட்டு, உழைப்பவர்களுக்கு வாய்ப்பை மறுத்து, தன் சாதிக்காரர்களுக்கும், பணபலமிக்கவர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வருகின்றனர்.

தமிழக முதல்வரின் அகில இந்திய ரீதியிலான சமூக நீதி குறித்த முன்னெடுப்பு மிகவும் வரவேற்கத்தக்கதே.
ஆனால் தமிழக முதல்வர் தன் கட்சியிலும்,ஆட்சியிலும் சமூகநீதியை உறுதி செய்யாமல் அகில இந்திய அளவில் முன்னெடுத்தால்… கட்டிடம் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் என்றுதான் விமர்சனம் எழும்.

இதற்கு அடிப்படையாக சில காரணங்களை கூறலாம்.

தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி ஜெயலலிதா வரை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, கட்சி,ஆட்சி, நிர்வாகத்தில் தனக்கும் கட்சிக்கும் விசுவாசமான அனைத்து சமுதாயத்தினருக்கும் வாய்ப்பு வழங்கி வந்தார்கள்.

திராவிட முன்னேற்றக்கழகத்தில் பெரும்பான்மை சாதியினருக்கே மாவட்ட பொறுப்பிலிருந்து கிளைக்கழக பொறுப்பு வரை அளிக்கப்படுகிறது. ரிசர்வ் தொகுதியான ஒன்றிரண்டு இடங்கள் தவிர அனைத்தும் பெரும்பான்மை சமூகத்திற்கே வழங்கப்படுகிறது. இதுதவிர அரசு நியமனப்பதவிகள், வாரியங்கள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்களின் விருப்பப்படியே வழங்கப்படுகிறது. மொழி, சாதி சிறுபான்மையினருக்கு எந்தஒரு வாய்ப்பும் திமுக கழகத்தில் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து திமுக தலைமையும் கவலை கொள்வதில்லை. சாதாரண தொண்டர் தலைமையை அணுகி தன் குறையை போக்கிக்கொள்ளமுடியாது. மாவட்ட செயலாளர், அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள தலைமைக்கழக நிர்வாகிகள் தாண்டி தலைமையை ஒருபோதும் நெருங்கிவிடமுடியாது. பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு சமூகநீதி என்றால் என்னவென்றுகூட தெரியாது.

இப்படியான சூழலில் சாதி , மொழி சிறுபான்மையினர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பாக  இருந்தது உள்ளாட்சி தேர்தல் தான்.
ஆங்காங்கே ஒருசில இடங்களில் தாங்கள் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் வார்டுகளில் போட்டியிடும் வாய்ப்பையாவது பெற்று வந்தனர்.

ஆனால் அதற்கும் முடிவுகட்டியுள்ளது கோவை மாநகராட்சி தேர்தலுக்கு வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியல்.

ஒட்டுமொத்த சிறுபான்மை சாதியினருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மாவட்ட செயலாளரின் அரஜாகப்போக்கால் திமுக-வில் நீண்டகாலம் பணியாற்றி வரும் கம்பளத்தாரின் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சியிலுள்ள 97 ஆவது வார்டில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் பகுதிச் செயலாளராக இருந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுத்தார். இருந்தும் அந்த சட்டமன்றத் தொகுதியில் திமுக தோல்வி அடைந்தது. கட்சியில் கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் திமுக வேட்பாளருக்கு மிக அதிக வாக்குகள் பெற்றுக்கொடுத்ததோடு, தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்த்து மக்கள் செல்வாக்கோடு இருந்து வருகிறார்.

இதனால் தனக்கு நிச்சயம் மாநகர வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவரும், அவரது ஆதரவாளர்களும் நம்பி வந்தனர். அதற்கேற்றாற்போல் திமுக தலைமை தனியார் நிறுவனம் மூலம் நடத்திய ரகசிய ஆய்விலும் அவருக்கு சாதகமான முடிவே இருந்துள்ளது. இதையறிந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பாகவே மாவட்டத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நம்பிக்கை அளித்தனர்.

ஆனால் நேற்று பட்டியல் வெளியானபொழுது மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகளுக்கு 97-வது வார்டு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விசயமாக பார்க்கப்படுவது யாதெனில் மாவட்டச் செயலாளர் குடியிருப்பது அந்த வார்டோ அல்லது அருகிலுள்ள வார்டும் கூட கிடையாது.

அவர் குடியிருப்பது 15 கிமீ-க்கு அப்பால் உள்ள பகுதி. தற்போது வேட்பாளர் ஆக்கப்பட்டுள்ள அவரது மகளோ பல்லாயிரம் கிலோமீட்டர் தாண்டி பஞ்சாபில் படித்து வருபவர்.
பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரான மாவட்டச்செயலாளர் நகரின் எந்த வார்டில் வேண்டுமானாலும் நின்று வெற்றி பெற முடியும். ஆனால் அதையெல்லாம் செய்யாமல், அடுத்தவர் உழைத்து கட்சியை வலுப்படுத்தி வைத்துள்ள பகுதியில், கம்பளத்தார் போன்ற சிறுபான்மை சாதிகள் அதிகமுள்ள தொகுதியில், சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் ஒருசில வாய்ப்புகளையும் பறித்துக்கொள்வது என்ன மாதிரியான சமூகநீதியை கொங்கு மண்டல திமுக பொறுப்பாளர்கள் கடைபிடித்து வருகின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆனால் அதிமுக-வில் அதே பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவர்கள் மாவட்டச் செயலாளராகவும், சட்ட மன்ற
உறுப்பினர்களாக இருந்தபோதும்கூட 91-வது வார்டில் கம்பளத்தார்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதால் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த அதிமுக தொண்டருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட உதாரணம் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல் கொங்கு மாவட்டம் முழுவதும் இதுதான் நிலை.

கொங்கு மண்டலத்தில் திமுக பெரிய அளவில் வெற்றிபெற முடியாமல் போனதிற்கும்/ போவதற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சமூகநீதி கட்சியில் குறைந்த பட்சம் கூட இல்லாததும், அதை தலைமை கண்டும்காணாமல் இருப்பதும் தான்.

தமிழக முதல்வரும் ஏகப்பட்ட குழுக்களை உருவாக்கி வருகிறார். அதில் சிறந்த ஆளுமைகளை நியமிப்பது மகிழ்ச்சிக்குரியது என்றாலும் கட்சிக்காக உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்த சாதி,மொழி சிறுபான்மை சமுதாய தலைவர்கள் பலர் உண்டு.

அவர்களுக்கு நியமனப்பதவிகள் கூட வழங்கப்படுவதில்லை.தமிழக முதல்வர் தன் கட்சியில் சமூகநீதி படும் பாட்டை நேரமிருக்கும்பொழுது கவனித்தாரேயானால் கட்சியின் அடித்தளம் முழுமையாக கரையான் அரிக்கும் முன் காப்பாற்றலாம்” என்கிறார் நாகராஜன்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share