சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலாவின் தண்டனைக் காலம் இன்றோடு (ஜனவரி 27) முடிவடைகிறது. இன்று காலை 9.30 முதல் 10 மணிக்குள் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஜனவரி 20 ஆம் தேதி சசிகலா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 27) சசிகலா அதிகாரபூர்வமாக சிறையில் இருந்து விடுதலையாகிறார்.
சசிகலா விடுதலைக்கு கர்நாடக உள்துறை அனுமதி வழங்கிவிட்ட நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் இன்று காலை 10 மணிக்கு மேல் விக்டோரியா மருத்துவமனைக்குச் சென்று சசிகலாவை சந்திக்கிறார்கள். அங்கே அவர் விடுதலை செய்யப்படும் ஆவணங்களில் சசிகலாவிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு திரும்புகிறார்கள். இதையடுத்து சசிகலா முறைப்படி சிறையில் இருந்து விடுதலையாகிவிட்டார் என்று பொருள்.
சசிகலா விடுதலை ஆன அடுத்த நிமிடமே அவருக்கு இப்போது அளிக்கப்பட்டிருக்கும் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும். சசிகலா முழுமையாக அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார். இனிமேல் அவரை உயர்தர தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையைத் தொடர்வது சசிகலாவின் சொந்த விருப்பத்துக்கு உட்பட்டதாகிறது.
“சசிகலாவுக்கு அமமுக சார்பில் அளிக்கத் திட்டமிட்டிருக்கும் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. அதற்கு சசிகலா கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் விடுதலையாக வேண்டும். கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று அதன் பின் தனிமைப்படுத்துதல் முடித்துக்கொண்டுதான் சசிகலா தமிழகம் திரும்புவார். அப்போதுதான் அவருக்கு திட்டமிட்டப்படி பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடியும். அந்தத் தனிமைப்படுத்துதல் குறைந்தது ஒரு வாரமாகவோ அதிகபட்சம் இரு வாரமாகவோ இருக்கலாம்”என்கிறார்கள் அமமுக வட்டாரங்களில்.
**-வேந்தன்**�,