திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு இன்று (ஜூலை 17) ஆம் தேதி பிறந்தநாள். இதை ஒட்டி அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். சபரீசனுக்கு அரசியல், ஊடகம், தொழில் வட்டாரங்களில் பல நண்பர்கள் இருந்தாலும், கொரோனா காலம் என்பதால் பலரும் வாழ்த்து சொல்ல அவரை சந்திக்கவில்லை. அலைபேசியிலேயே பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் தொடங்கி அன்பில் மகேஷ், கௌதம சிகாமணி எம்பி, மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி டாக்டர் பிரபு உள்ளிட்ட பலர் சபரீசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திமுக இளைஞரணியின் பெரும்பாலானோர் சபரீசனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் திமுகவின் பல்வேறு பிரமுகர்களும் சமூக தளங்களில் சபரீசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அரசியல்வாதிகளைப் போலவே பில்டப் வசனங்கள் எழுதி சபரீசனை வாழ்த்தியிருக்கிறார்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் கூட எப்போதோ சபரீசனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக தளங்களில் இட்டு வாழ்த்துகளை வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞரணியினர் சிலரிடம் இதுபற்றி நாம் பேசும்போது, “பிகே, சுனில் வருவதற்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தி வகுப்பாளர் சபரீசன் தான். அதனால்தான் சபரீசனைப் பிடித்தால் சகலத்தையும் பிடித்துவிடலாம் என்ற நோக்கத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கொரோனா மட்டும் இப்போது இல்லையென்றால் இந்த வருடம் சபரீசன் பிறந்தநாள் விமரிசையாகவே கொண்டாடப்பட்டிருக்கும். சபரீசனுக்கு ஒவ்வொரு வருடமும் கட்சியினர் மத்தியில் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே போவது சமூக தளங்களில் அவருக்கு கிடைக்கும் வாழ்த்துகள் மூலமே தெரியவருகிறது. பின்னணியில் இருந்து அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வந்த சபரீசன்… கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்காக டெல்லி சென்று சோனியா, ராகுலை பார்த்தபோது ஸ்டாலினோடு இருந்தார்.இந்நிலையில்… இந்த பிறந்தநாளுக்குப் பிறகு வெளிப்படையான அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபடச் சொல்லி அவரை வாழ்த்திய பலரும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்” என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,