ராஜபாளையம் மக்களால் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் நபர் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 50ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நக்கனேரியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மன்மதன் (57). இவர் தொடக்கத்தில் எம்ஜிஆரின் ரசிகராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்பு ரஜினி ரசிகராக மாறிய அவர் அரசியலுக்கு வர வேண்டும் என 1989 முதல் 2020 வரை பல தேர்தல்களில் போட்டியிட 49 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட 50ஆவது முறையாக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பா்கூா் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதேபோல் டிடிவி தினகரன், உஷா ராஜேந்தா், முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலம், சட்டப் பேரவை முன்னாள் தலைவர் காளிமுத்து உள்ளிட்ட தலைவர்களை எதிர்த்து மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனால் இவரை தேர்தல் மன்னன் என்றே இப்பகுதி பொதுமக்கள் அழைக்கின்றனர். மன்மதனுக்குத் திருமணமாகி தெய்வானை என்ற மனைவியும், மோகன் ஸ்டாலின் ராஜ், மதன வனராஜ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட
ஆர்வமாக உள்ளார்.
**வாழைக் குலையுடன் வந்து வேட்புமனு**
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டசபைத் தொகுதிக்கு வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று பத்துமடையைச் சேர்ந்த விவசாயி வாழைக் குலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
பத்துமடையைச் சேர்ந்த முத்தையா மகன் கவாஸ்கர் (28). விவசாயியான இவர் சுயேச்சையாக அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சேரன் மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியின் முதன்மையான தொழில் விவசாயம். நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் செய்வதற்கு பல்வேறு இடங்களில் அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் வைத்துள்ள நிலையில் அரசே விலை நிர்ணயித்து வாழையைக் கொள்முதல் செய்வதோடு பதப்படுத்துவதற்கும் நிலையங்களை அமைத்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித் தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறினார்.
வாழை சாகுபடி விவசாயிகள் நலன் கருதி வாழைக் குலையுடன் விவசாயி வந்து வேட்புமனு தாக்கல் செய்தது பலரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
**சக்தி பரமசிவன்**
�,”