தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு பிரேமலதா பதிலளித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து 2014ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், அண்மையில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா, திமுகவின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய பலத்தின்படி அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் சார்பில் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும்.
தேர்தலுக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போதே மாநிலங்களவை உறுப்பினருக்கான ரேஸ் ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று (பிப்ரவரி 25) செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து இதுவரை பேசவில்லை. கூட்டணி அமைத்தபோது இதுபற்றி பேசியதுதான். அதன்பிறகு ஏதும் பேசவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று பதிலளித்தார்.
இதுதொடர்பாக அதிமுகவிடம் தேமுதிக மீண்டும் வலியுறுத்துமா என்ற கேள்விக்கு, “கூட்டணி அமைத்தபோது இதுகுறித்து பேசியுள்ளோம். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்ற கருத்தினை முன்வைத்தார் பிரேமலதா.
**த.எழிலரசன்**�,”