கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் தொடருமா தொடராதா என்ற கேள்வி இப்போது வலுவாக எழத் தொடங்கியிருக்கிறது.
காரணம் வன்னியர் இட ஒதுக்கீட்டை முன் வைத்து அதிமுகவுடனும், தமிழக அரசுடனும் மெல்லிய அளவில் மோதல் போக்கைத் தொடங்கிய பாமக, இப்போது அதைத் தொடர்ந்து தீவிரமாக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை மின்னம்பலத்தில் [தனித்துப் போட்டி: ராமதாஸ் ‘தில்’…பாமக நிர்வாகிகள் ‘திகில்!](’https://minnambalam.com/politics/2021/01/23/21/Dr-Ramadoss-PMK-will-contest-individually-without-alliance) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஏற்கனவே நடந்த பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டங்களில், “வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுபற்றிப் பேசினால்தான் கூட்டணி பற்றி பேச முடியும்” என்று தெரிவித்தது பாமக.
ஆனால் தமிழக அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை இருமுறை சந்தித்துப் பேசியபோதும் இது தொடர்பாக இறுதிமுடிவு எட்டப்படவில்லை.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% பட்டியலில் வன்னியர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு அளித்தால்… பிறசமுதாயத்தினரின் பரவலான எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்து தமிழக அரசு இதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று (ஜனவரி 23) வெளியிட்ட அறிவிப்பு நமது காலை செய்திக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.
”கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறவிருக்கிறது.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற பா.ம.க நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்படவிருக்கிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை வழிக்குக் கொண்டுவருவதற்கான பேரமா, அல்லது தனித்துப் போட்டியிடுவதற்கான அச்சாரமா என்று பாமகவினருக்குள் ஒரு பக்கம் பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது.
**-வேந்தன்**
�,