தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கேரளாவில் புதிதாக உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஆண்டுக்கு ஆண்டு உருமாறி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி தற்போது புதிதாக மாறியுள்ள தொற்றுக்கு ஒமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வகை வைரஸ் தடுப்பூசியின் செயல்திறனைக் குறைத்து வேகமாகப் பரவக்கூடியது என்றும் சமூகப் பரவலாக உருவெடுக்க அனுமதித்தால் டெல்டாவை விட வேகமாக பரவும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சூழலில் கடந்த 24ஆம் தேதி முதல் 19 நாட்களில் குறைந்தது 60 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது ஆந்திரா மற்றும் கேரளாவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது.
நேற்று முன்தின நிலவரப்படி, 33 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்று தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மற்றும் ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அயர்லாந்திலிருந்து ஆந்திரா வந்த 34 வயது வெளிநாட்டுப் பயணிக்கு இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அயர்லாந்திலிருந்து மும்பைக்கு விமானத்தில் வந்து இறங்கியபோது பரிசோதனை செய்ததில் அந்தப் பயணிக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து ஆந்திரா செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் விஜயநகரத்தில் இரண்டாவது முறையாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ததில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது சளி மாதிரி ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதாக ஆந்திரா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கேரளாவுக்கு இங்கிலாந்திலிருந்து கடந்த 6ஆம் தேதி கொச்சி திரும்பிய எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அந்த நபரின் மனைவி மற்றும் தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதுபோன்று இத்தாலியிலிருந்து சண்டிகருக்கு வந்த 20 வயது இளைஞருக்கு ஒமிக்ரான் வைரஸ் பற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 22ஆம் தேதி இந்தியா வந்த அவருக்கு டிசம்பர் 1ஆம் தேதி கொரோனா உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவரது சளி மாதிரி எடுத்து மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்படி இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18 பேருக்கும், ராஜஸ்தானில் 9 பேருக்கும், குஜராத்தில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும், கேரளா, ஆந்திரா மற்றும் சண்டிகரில் தலா ஒருவருக்கும் என இந்தியாவில் மொத்தம் 38 பேருக்கு புதிய வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களிலும் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு நீட்டிப்பு ஆகியவை குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
**-பிரியா**
�,