மகிழ்ச்சி, மன நிறைவு: மோடி சந்திப்பு பற்றி ஸ்டாலின்

Published On:

| By Balaji

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 17) மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை டெல்லியில் அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்தது. பிரதமரை சந்தித்ததற்குப் பிறகு தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று அங்கே செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

“ கொரோனா என்ற பெருந்தொற்று பரவல் காரணமாக பதவியேற்ற உடனேயே பிரதமரை சந்திக்க முடியவில்லை. நியாயமாக முன்பே சந்தித்திருக்க வேண்டும். எனினும் இப்போது தொற்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் குறையும் நிலையில், பிரதமரிடம் நேரம் கேட்டேன். அவரும் நேரம் ஒதுக்கிக்கொடுத்தார்.

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியான சந்திப்பாக மன நிறைவான சந்திப்பாக இருந்தது. முதலில் எனக்கு வாழ்த்துகளை சொன்னார். நானும் அவருக்கு நன்றி சொன்னேன். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதிமொழியளித்தார். எந்த கோரிக்கை என்றாலும் என்னோடு எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டின் திட்டங்கள், தேவைகளுக்கான கோரிக்கைகளை முழுமையாக தயாரித்து அவரிடம் கொடுத்திருக்கிறோம். அதை முழுமையாக சொல்ல நேரம் இல்லை. அதில் சில தலைப்புகளை மட்டும் சொல்கிறேன்” என்றவர் அதைப் பட்டியலிட்டார்.

“தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கவேண்டும். செங்கல்பட்டு, ஊட்டி தடுப்பூசி மையத்தை செயல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டுக்கான நிலுவையில் இருக்கும் நிதியை தர வேண்டும், ஜிஎஸ்டி பாக்கியை தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும், மேகதாது அணைத் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட வேண்டும், காவேரி-கோதாவரி இணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், கச்சத் தீவு மீட்பு, புதிய மின்சார சட்டம் நீக்கப்பட வேண்டும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுத்தப் படவேண்டும், கோவையிலும் புதிய எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும், மருத்துவக் கல்லூரியில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும், ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை, செம்மொழித் தமிழாய்வு மையம் சீரமைக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அளவுகோலை மாநிலங்களே தீர்மானிக்க வேண்டும், சேது சமுத்திர திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், பெண்களுக்கு 33% ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்ற வேண்டும், குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடத்திலே மெமோரண்டமாக கொடுத்திருக்கிறோம்.

இதில் பல பிரச்சினைகள் நேரடியாக ஒன்றிய அரசு செய்ய வேண்டியது. சில பிரச்சினைகள் இரண்டு அரசுகளும் இணைந்து செய்ய வேண்டியிருக்கிறது. நிறைவேற்ற முடியும் என்ற நம்பிகையை டெல்லி பயணம் கொடுத்திருக்கிறது, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுப்போம். தலைநகரில் தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து வாதாட வேண்டும்” என்று கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தக் கோரிக்கைகளுக்கு பிரதமர் என்ன பதில் சொன்னார் என்று கேட்டபோது, “ நான் அமைச்சர்களோடு பேசி, அதிகாரிகளோடு பேசி நல்ல முடிவு சொல்கிறேன் என்று பிரதமர் சொல்லியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

ஒன்றிய அரசுடனான உறவு எப்படியிருக்கும் என்று கேட்டபோது, “கலைஞரின் வழியில் உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்”என்று பதில் அளித்தார் ஸ்டாலின்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share