விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்குள்ளான மூன்று வேளாண் சட்டங்களை நேற்று (நவம்பர் 19) பிரதமர் மோடி திரும்பப் பெற்ற நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விவசாயிகள் தொடர்பான மேலும் ஒரு சர்ச்சையில் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (நவம்பர் 20) உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடக்கும் டிஜிபி -க்கள் மாநாட்டிப் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதில் லெகிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஆஷிஷின் தந்தையான ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவும் கலந்துகொள்கிறார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்று அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “விவசாயிகளைப் பற்றிய உங்கள் நோக்கங்கள் தெளிவாக இருந்தால், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு அப்புறம் அந்த மேடையில் பங்குபெறுங்கள்”என்று குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா காந்தி.
கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி லெக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சரின் மகன் ஆஷிஷின் ஜீப் புகுந்து விவசாயிகள் மீது ஏறியது. இந்த சம்பவத்திலும் இது தொடர்பான வன்முறையிலும் 8 பேர் கொல்லப்பட்டனர். கடும் போராட்டத்துக்குப் பிறகே அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் கைது செய்யப்பட்டார். விசாரணையும் நடைபெற்றது.ஆனால் அவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையில், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் என்பவரை உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் விவசாயிகள் சட்டம் ரத்து செய்யப்பட்டபோதும் மோடியின் விவசாய இமேஜுக்கு இன்னொரு சவாலை உருவாக்கியுள்ளார் பிரியங்கா காந்தி.
**-வேந்தன்**
�,