தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக இதற்கான ஆயத்தங்களில் தீவிரமாகியுள்ளது. கூட்டணிக் கட்சியான அதிமுகவை ஒருபக்கம் விமரிசித்துக்கொண்டிருக்கும் பாஜகவினர், இதன் அடுத்தகட்டமாக… பிரதமரின் கிசான் உதவித் தொகை ஊழல் தொடர்பாக நேற்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும், தலைமைச் செயலாளரிடமும் புகார் மனுக்களை அளித்துள்ளது.
இதற்கிடையில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி, பாஜக தலைவர் எல்.முருகன் தமிழகத்தில் யாத்திரையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் தமிழகம் முழுவதும் பட்டித் தொட்டியெல்லாம் தாமரையை மலரவைக்கவும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘வெற்றிவேல் யாத்திரை’யை, திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிறைவுசெய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்த யாத்திரையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயணத்திட்டத்தை வகுத்து வருபவர், அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்துவருவதாகச் சொல்கிறார்கள் பாஜக பிரமுகர்கள். வாகனம் மூலமாக யாத்திரை வரும்போது அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யவும் மாவட்டத் தலைவர்களிடமும், அணியின் நிர்வாகிகளிடமும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
திருத்தணி – திருச்செந்தூர் வரையிலான பாஜக தலைவர் முருகனின் யாத்திரையின்போது அதிமுக மீதும், திமுக மீதும் மேலும் பல தாக்குதல்களைத் தொடுக்கக் கூடும் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.
**-வணங்காமுடி**�,